நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன?


  • சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு பாதியை திரும்பியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்ததும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளதால், உலக சந்தைகளின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.

    Advertisement

    வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.7 சதவீதம் உயர்ந்து 4,464.69 டாலராக உயர்ந்தது. அதேபோல் ஆகஸ்ட் மாத அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களும் 0.6 சதவீதம் உயர்ந்து 4,491.70 டாலரை எட்டின.

    Advertisement

    அமெரிக்க டாலர் மதிப்பு சற்று பலவீனமடைந்ததே இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டாலரில் விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கம், டாலர் மதிப்பு குறையும்போது பிற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு மலிவாக கிடைக்கிறது.

    தங்கம் விலை

    இதனால் சர்வதேச அளவில் வாங்கும் ஆர்வம் அதிகரித்து தங்க விலையும் உயர்கிறது. சந்தை ஆய்வாளர்கள் கூறுகையில், தற்போது தங்கத்தின் நகர்வு பெரும்பாலும் கச்சா எண்ணெய் மற்றும் டாலர் மதிப்பை சார்ந்தே உள்ளது என தெரிவிக்கின்றனர். எண்ணெய் விலை குறையும் போதும், டாலர் பலவீனமடையும் போதும் தங்கம் ஏற்றம் காண்கிறது. எனவே அமெரிக்கா - ஈரான் தொடர்பான அரசியல் முன்னேற்றங்களே அடுத்தகட்ட விலை மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    மத்திய கிழக்கு

    இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட இருப்பதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றம் குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஈரான் தொடர்பான மோதல்களுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உலக சந்தைகளில் உருவாகியுள்ளது. அமெரிக்க அரசியலிலும் இந்த விவகாரம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கச்சா எண்ணெய் விலை

    குடியரசுக் கட்சி பெரும்பான்மை கொண்ட பிரதிநிதிகள் சபை, ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் போர் நீடிப்பது குறித்து அக்கட்சிக்குள்ளேயே கவலை அதிகரித்திருப்பது வெளிப்பட்டுள்ளது. மற்றொரு புறம், கச்சா எண்ணெய் விலையும் சரிவை சந்தித்துள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை காரணமாக எண்ணெய் சந்தையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அமெரிக்க மத்திய வங்கி

    பொதுவாக எண்ணெய் விலை உயரும்போது பணவீக்கம் அதிகரிக்கும். அதனால் வட்டி விகிதங்களும் உயர்வாக நீடிக்கும். வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் சூழலில் தங்க முதலீடு சற்று பாதிக்கப்படும். ஆனால் தற்போது எண்ணெய் விலை குறைவதால் தங்கத்திற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் நியூயார்க் பிராந்திய தலைவர் ஜான் வில்லியம்ஸ், மத்திய கிழக்கு போர் காரணமாக பணவீக்கத்தில் ஏற்படும் தாக்கம் நீண்டகாலம் நீடிக்காது என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் அமெரிக்க பணவியல் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    தங்க சந்தை

    சந்தை நிபுணர்கள் பலரும் தங்கத்தின் நீண்டகால ஏற்றப் போக்கு இன்னும் முடிவடையவில்லை என்று கருதுகின்றனர். இருப்பினும், ஆண்டின் இறுதி மாதங்களில் விலை ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். சில ஆய்வாளர்கள், தங்கம் அடுத்த சில மாதங்களில் 5,000 டாலர் இலக்கை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாகவும் மதிப்பிட்டுள்ளனர்.

    பிளாட்டினம்

    தங்கத்துடன் சேர்த்து மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு அவுன்ஸுக்கு 1 சதவீதம் உயர்ந்து 73.44 டாலராகவும், பிளாட்டினம் 1 சதவீதம் உயர்ந்து 1,878.50 டாலராகவும், பலாடியம் 0.6 சதவீதம் உயர்ந்து 1,309.68 டாலராகவும் வர்த்தகமாகியுள்ளது.

    Advertisement

    பாதுகாப்பான முதலீடு

    மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலை, அமெரிக்க டாலரின் நகர்வு, கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி கொள்கை ஆகியவை வரும் நாட்களில் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு உலக முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீதே திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Gold prices climb again amid weaker dollar, lower oil prices and renewed investor interest in safe-haven assets.