சென்னை: தங்கத்தின் விலை இப்போது சில காலமாக சரிந்தாலும் ஒட்டுமொத்தமாக அதன் விலை அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் தங்கத்துக்கான தேவை 29 சதவீதம் சரிந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.. இறக்குமதி வரி உயர்வு, தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் தங்கம் வாங்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. உலக அளவில் நிலவும் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பணவீக்கம் உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தங்கம் விலை கடந்தாண்டை விட அதிகமாகவே இருக்கிறது.
இதற்கிடையே இந்தியாவில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் தங்கத்துக்கான தேவை 29 சதவீதம் சரிந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தங்க தேவை 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 229.8 டன்னாக இருந்த நிலையில், இது நடப்பாண்டில் 162.5 டன்னாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தங்கத்தின் மொத்த மதிப்பு 3 சதவீதம் உயர்ந்து ரூ.2,41,900 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.2,35,090 கோடியாக இருந்தது. சர்வதேச மார்கெட்டில் இந்த காலகட்டத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சராசரி விலை 4,262 டாலராக இருந்தது. இந்திய மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,48,891 ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,457 டாலராக அதாவது 10 கிராம் ரூ.1,02,287 ஆக இருந்தது. இத்தோடு இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி சேர்ந்தால் மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக தங்க நகைகளுக்கான தேவை குறைந்துள்ளது. அதன் தேவை 20 சதவீதம் குறைந்து 99.9 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இது 125 டன்னாக இருந்தது. ஆனால், நகைகளின் மதிப்பு 16 சதவீதம் அதிகரித்து ரூ.1,48,700 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சிலின் இந்திய பிராந்திய சிஇஓ சச்சின் ஜெயின் கூறுகையில், "அதிக விலை காரணமாக மக்கள் தங்கம் வாங்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை சமாளிக்க குறைந்த எடை கொண்ட நகைகளை மக்கள் வாங்குகிறார்கள். மேலும், பழைய நகைகளை மாற்றி புதிய நகைகள் வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது" என்றார். தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவையும் 40 சதவீதம் சரிந்து 55 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இது 91.6 டன்னாக இருந்தது. கோல்ட் ETFs தேவை 50 சதவீதம் குறைந்து 5.3 டன்னாகியுள்ளது. கடந்த ஆண்டு இது 10.7 டன்னாக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி மூன்றாவது காலாண்டில் தங்கம் எதையும் வாங்கவில்லை. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 0.2 டன் தங்கம் வாங்கியிருந்தது. இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவும் 12 சதவீதம் குறைந்து 19.2 டன்னாக உள்ளது. மேலும், தங்கத்தின் நிகர இறக்குமதி 46 சதவீதம் சரிந்து 114.1 டன்னாகியுள்ளது. கடந்த ஆண்டு இது 211.9 டன்னாக இருந்தது. அதிகாரப்பூர்வ இறக்குமதி குறைந்துள்ள போதிலும், அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் தங்கம் வருவது அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது இறக்குமதி வரியை தவிர்க்க சட்டவிரோதமாக நாட்டில் தங்கம் கொண்டு வரப்படுவது அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.29% சரிவு
எவ்வளவு சரிவு
வல்லுநர்கள் சொல்வது என்ன
ரிசர்வ் வங்கி