வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தால் வருமானம்! பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்! வேற லெவல் ஐடியா!

  • டெல்லி: வீட்டில் பயன்படுத்தாமல் லாக்கரில் வைத்திருக்கும் தங்க நகைகள் அல்லது தங்க நாணயங்கள் மூலம் பொதுமக்கள் வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு விரைவில் புதிய திட்டத்தை அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தங்க பணமாக்கல் திட்டத்தை (Gold Monetisation Scheme - GMS) புதுப்பித்து, அதில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இந்த புதிய திட்டத்தின் மூலம், இனி வங்கிகள் மட்டுமின்றி நகைக் கடைகளும் பொதுமக்களிடமிருந்து தங்கத்தை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் திட்டத்தில் அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது.

    Advertisement

    2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய தங்க பணமாக்கல் திட்டத்தின் நோக்கமே, வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்கத்தை வங்கிகள் மூலம் பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வருவதே ஆகும்.

    தங்க பணமாக்கல் திட்டம்

    இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகள் அல்லது தங்க நாணயங்களை வங்கியில் ஒப்படைக்கலாம். அதன் தூய்மை பரிசோதிக்கப்பட்ட பிறகு தங்கம் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்படும். அதற்கு பதிலாக, தங்கத்தை ஒப்படைத்தவர்களுக்கு வட்டி வழங்கப்படும். திட்டத்தின் காலம் முடிந்த பிறகு, முதலீட்டாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்கமாகவோ அல்லது அதற்கு இணையான பணமாகவோ திரும்பப் பெற முடியும்.

    Advertisement

    தங்கம் இறக்குமதி

    இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வீடுகளில் ஏராளமான தங்கம் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. இந்த குறைபாட்டைப் போக்குவதற்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் அறிமுகமானபோது நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது வெற்றி பெறவில்லை. இந்தியாவில் சுமார் 25,000 டன் தங்கம் வீடுகளிலும் கோயில்களிலும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 38 டன் தங்கம் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பணமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வங்கிகள்

    முதலாவதாக, வங்கிகள் மட்டுமே தங்கத்தை பெறும் அதிகாரத்தை பெற்றிருந்தன. இதனால் மக்கள் அதிக அளவில் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாவதாக, குடும்ப பாரம்பரிய நகைகளை உருக்க வேண்டிய நிலை இருந்ததால் பலர் தயக்கம் காட்டினர். திருமண நகைகள், பரம்பரை நகைகள் போன்றவற்றை உருக்க விரும்பாத மக்களின் மனநிலையும் திட்டத்திற்கு தடையாக இருந்தது. மேலும், ஆவணங்கள், வரி தொடர்பான சந்தேகங்கள், பழைய நகைகள் குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்துமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் இருந்தது.

    Advertisement

    தங்கத்தின் விலை

    வங்கிகளுக்கும் இந்த திட்டத்தில் பெரிய வர்த்தக லாபம் கிடைக்காததால், அவையும் இதனை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. அதே நேரம், தங்கத்தின் விலை உயர்வையும் வட்டியையும் அரசு ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவும் அதிகரித்தது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய திட்டத்தில் நகைக் கடைகள் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    நகைக் கடைகள்

    இதுவரை வங்கியை மட்டுமே அணுக வேண்டியிருந்த நிலையில், இனி மக்கள் தங்களுக்கு நம்பிக்கை உள்ள நகைக் கடைகளிலேயே தங்கத்தை ஒப்படைக்கலாம். நகைக் கடைகள் தங்கத்தை சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் வங்கிகளுக்கு அனுப்பும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படலாம். இதன்மூலம் நாடு முழுவதும் அதிகமான சேகரிப்பு மையங்கள் உருவாகும். இதனால் திட்டத்தில் பொதுமக்களின் பங்கேற்பும் அதிகரிக்கும் என்கிறது மத்திய அரசு.

    Advertisement

    அமெரிக்க டாலர்

    இதனால், வீடுகளில் உள்ள தங்கத்தில் வெறும் 5 சதவீதம் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் கொண்டு வந்தாலும், இந்திய பொருளாதாரத்திற்கு சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டு மதிப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய திட்டம் அமலுக்கு வந்தால், வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்கத்தை லாக்கரில் வைத்திருப்பதற்கு பதிலாக, அதிலிருந்து வட்டி வருமானம் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

    மத்திய அரசு

    மேலும், புதிய தங்கம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவையும் குறையலாம். இதனால் நாட்டின் வெளிநாட்டு செலவினமும் குறையும் என்று அரசு கருதுகிறது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு வருடத்திற்கு புதிய தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த புதிய திட்டம் குறித்து மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த தங்க பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

    English Summary

    Centre may revamp Gold Monetisation Scheme, allowing households to earn returns from idle gold through banks and jewellers.