Jamun fruit: நாகப்பழத்தில் பாம்பு விஷம்பட்டு சிறுவன் பலியா? உண்மை என்ன? மருத்துவர் விளக்கம்

  • சென்னை: இலங்கையில் பாம்பின் விஷம் பட்ட நாகப்பழத்தை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நமது அண்டை நாடான இலங்கையில் மட்டக்களப்பு ஊரில் , பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக செய்தி வருகிறது.

    Advertisement

    நேற்று முன் தினம் மாலை வீட்டிற்கு அருகிலுள்ள நாவல் மரத்தில் இருந்து நிலத்தில் விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்ட சிறுவன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    பாம்பின் விஷம்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்டதே உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக. உண்மையில் பாம்பு பழங்களில் விஷத்தை ஏற்றுமா? அப்படியே பாம்பின் விஷம் பழங்களில் இருந்தாலும் அவற்றை உண்பதால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுமா?

    Advertisement

    இரண்டுக்கும் இல்லை என்பதே பதில். பாம்புகள் தாவரப்பட்சினிகளோ பழமுண்ணிகளோ அன்று. அவை மாமிசத்தை மட்டுமே உண்டு பிழைக்கும் மாமிசப்பட்சினிகள். தவளைகள், கொரித்து உண்பவை, பறவைகள், மீன்கள், பூச்சிகள் இவற்றை மட்டுமே உண்ணும் வகையில் அவற்றின் ஜீரண மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    எனவே, நாவல் பழத்தை அவை உண்ணாது. முதல் தர்க்கமே பிழையானது. சரி ஒருவேளை தெரியாமல் அறியாமல் தனது விஷத்தை பழத்தில் அது இறக்கி வைத்திருந்தாலும் அந்த விஷம் என்பது புரதமும் பல்வேறு வகை நொதிகளும் அடங்கிய கலவையாகும். அந்த விஷத்தை தனது விஷப் பற்கள் மூலம் ஊசி போட்டு எதிரி விலங்கிற்குள் ஏற்றி ரத்தத்தில் கலக்கச் செய்தால் மட்டுமே விஷத்தன்மை இருக்கும்.

    Advertisement

    மற்றபடி பாம்பின் விஷத்தை மனிதர்கள் பருகினாலும் மனிதர்களுக்கு விஷம் ஏறாது.
    காரணம், நமது இரைப்பையில் இருக்கும் வீரியமான ஹைட்ரோ குளோரிக் அமிலம் பாம்பின் நஞ்சை முழுவதுமாக செரித்து விடும். ஒருவேளை வாய் பகுதியில் ஈறுகளில் காயம் இருந்து அதன் வழியாக உள்ளே சென்று ரத்தத்தில் கலந்தால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

    மற்றபடி பாம்பின் விஷம் ஏறிய பழம் அதை சாப்பிட்டதால் சிறுவன் மரணம் என்பது அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் பிழையானது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே உண்மையை வெளிக் கூறும். எனினும் சிறுவனின் இறப்பிற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

    Advertisement

    நாவல் மரத்தில் பழங்களைப் பறிக்கும் போது நிஜமாகவே அங்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கி சில நிமிடங்களில் மரணத்தைக் கொண்டு வரும் நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்பு கடித்திருக்கலாம்.

    பல நேரங்களில் பாம்பு கடித்த பற்கள் வெளியே தெரியாமலும் இருக்கலாம். பாம்பு கடித்ததை முள் தைத்ததாக சிறுவன் தவறாக எண்ணி நேரத்தை வீணடித்திருக்கலாம். அல்லது
    காலதாமதம் ஆனதால் சுவாசத்திற்கு தேவையான தசைகள் செயலிழந்து மரணித்திருக்கலாம்.

    இரண்டாவது வாய்ப்பு

    அந்த மரத்தில் இருந்த குழவி அல்லது கட்டெறும்பு ஆகியவை கடித்து அதனால் அதி தீவிர ஒவ்வாமை (ANAPHYLAXIS) ஏற்பட்டு அதனால் மூச்சுக் குழாய் சுருங்கி மரணம் சம்பவித்திருக்கலாம்.

    Advertisement

    மூன்றாவது வாய்ப்பு

    மரத்தில் இருந்து கீழே விழுந்து அதனால் பின் மண்டையில் / கழுத்து தண்டு வட எலும்பு அடிபட்டு மூர்ச்சையாகி மரணம் சம்பவித்திருக்கலாம். பிரேதப் பரிசோதனையில் மட்டுமே இவை தெரிய வரலாம்.

    நான்காவது வாய்ப்பு

    அந்த சிறுவனுக்கு ஏற்கனவே இருந்த இதயம் சார்ந்த பாதிப்புகள் தீவிரமடைந்து அதனாலும் மரணம் சம்பவித்திருக்க சிறிய வாய்ப்புண்டு. பழங்கள் / காய்கறிகளில் பாம்பு வாய் வைக்கும், நஞ்சு கக்கும் என்பதில் அறிவியல் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.