EPFO புதிய விதிகள்.. இனி 75% பிஎஃப் பணத்தை உடனே எடுக்கலாம்! இபிஎஃப்ஓ முக்கிய அறிவிப்பு

  • டெல்லி; வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), தனது சந்தாதாரர்கள் அவசர காலங்களில் பிஎஃப் பணத்தை எளிதாக எடுக்கும் வகையில் பகுதி திரும்பப் பெறும் விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. வேலை இழப்பு, மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் போன்ற அத்தியாவசிய நிதித் தேவைகளுக்கு பிஎஃப் தொகையைத் தடையின்றி பயன்படுத்த புதிய நடைமுறை வழிவகை செய்கிறது.

    Advertisement

    75% பிஎஃப் தொகை உடனடியாகக் கிடைக்கும்

    புதிய விதிமுறைகளின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் மொத்த இருப்புத் தொகையிலிருந்து 75% வரை அவசரத் தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 25% தொகை கணக்கிலேயே இருக்கும்; இது சந்தாதாரரின் எதிர்கால ஓய்வுக்கால பாதுகாப்பிற்காக முதலீடாகத் தொடரும்.

    Advertisement

    முன்பு பிஎஃப் முன்பணம் பெறுவதற்கு 7 ஆண்டுகள் வரை பணிக்காலம் தேவைப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வகையான பகுதி திரும்பப் பெறுதல்களுக்கும் குறைந்தபட்ச பணிக்காலம் 12 மாதங்களாக (1 வருடம்) ஒரே சீராகக் குறைக்கப்பட்டுள்ளது.

    13 பிரிவுகள் 3 எளிய பிரிவுகளாக மாற்றம்

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முன்பு இருந்த 13 சிக்கலான திரும்பப் பெறும் பிரிவுகளை மூன்று முக்கிய எளிய பிரிவுகளாக ஒருங்கிணைத்துள்ளது:

    அத்தியாவசியத் தேவைகள்: அவசர மருத்துவ சிகிச்சை, குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகள் இப்பிரிவின் கீழ் வருகின்றன.

    Advertisement

    வீட்டுத் தேவைகள்: புதிய வீடு வாங்குதல், வீடு கட்டுதல், பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் வீட்டுக் கடன் தொடர்பான தேவைகளுக்குப் பணம் எடுக்கலாம்.

    சிறப்புச் சூழ்நிலைகள் : சந்தாதாரர்கள் எவ்விதக் குறிப்பிட்ட காரணத்தையும் ஆவணங்களுடன் விவரிக்காமல், தங்களின் பிஎஃப் தொகையிலிருந்து 75% வரை எடுத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக, இதற்கு முன்பு தொழிலாளரின் பங்கு மட்டுமே திரும்பப் பெற அனுமதிக்கப்பட்ட நிலையில், புதிய விதிகளின் கீழ் தொழிலாளியின் பங்கு, நிறுவனத்தின் பங்கு மற்றும் அதற்கான வட்டித் தொகை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மொத்த இருப்பிலிருந்து இந்த 75% கணக்கிடப்படுகிறது.

    Advertisement

    வேலை இழந்தால் பிஎஃப் எடுக்கும் புதிய நடைமுறை

    ஒரு ஊழியர் வேலையை ராஜினாமா செய்தாலோ அல்லது பணியை இழந்தாலோ, வேலை இழந்த உடனேயே தங்களின் பிஎஃப் தொகையிலிருந்து 75% வரை எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதங்கள் வேலையின்றி இருந்தால் மட்டுமே மீதமுள்ள 25% தொகையை முழுமையாக எடுக்க முடியும். பழைய 1952 திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்கள் வேலையின்றி இருந்தால் மொத்தத் தொகையையும் எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    மருத்துவம், கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கான வரம்பு

    மருத்துவச் சிகிச்சை:அவசர மருத்துவச் செலவுகளுக்கு பிஎஃப் முன்பணம் பெறுவதற்கு எவ்விதக் குறிப்பிட்ட முறை வரம்பும் விதிக்கப்படவில்லை. சந்தாதாரர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப விதிகளுக்கு உட்பட்டுப் பணம் பெறலாம்.

    Advertisement

    கல்விச் செலவு: பிஎஃப் சந்தாதாரர் தனது பணிக்காலத்தில் உயர்கல்வித் தேவைகளுக்காக அதிகபட்சமாக 10 முறை வரை பகுதி பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

    திருமணம்: திருமணச் செலவுகளுக்காகப் பணிக்காலத்தில் அதிகபட்சமாக 5 முறை வரை பணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    8.25% வட்டி விகிதம்

    2025-26 நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, 34 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் இந்த வட்டித் தொகை வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. பிஎஃப் விதிகளில் செய்யப்பட்டுள்ள இந்த எளிமைப்படுத்தல், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    EPFO Simplifies PF Withdrawal Rules: Members Can Now Access Up to 75% Balance for Emergencies