குரூப் 2 தேர்வு.. ஒரு இடத்துக்கு 579 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  • சென்னை: 846 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு வருகிற 1-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஒரு இடத்துக்கு 579 பேர் போட்டியிடுகிறார்கள். இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. 846 பணியிடங்களுக்கு 4 லட்சத்து 89 ஆயிரத்து 884 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்த ஆண்டுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தது. இதில் உதவி நன்னடத்தை அலுவலர் உள்பட குரூப்-2 பதவிகளுக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2ஏ பதவிகளுக்கும் என மொத்தம் 846 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

    Advertisement

    அதன்படி, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், விண்ணப்பதாரர்கள் அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    ஆனால், இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது. ஏனெனில், குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் குறைவான காலி இடங்களே அறிவிக்கப்பட்டுள்ளன. அதிக இடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த பல இளைஞர்கள், காலிப் பணியிடங்களின் குறைவால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    Advertisement

    கடந்த ஆண்டில் (2025) இதேபோல் ஜூலை மாதத்தில் குறைவான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், தேர்வுக்கு முன்பாகக் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதேபோன்று நடப்பாண்டிலும் இடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த தேர்வர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போயுள்ளது. ஏனெனில், அதிகாரப்பூர்வமாகத் தேர்வுக்கான தேதியை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துவிட்டது.

    நடப்பாண்டுக்கான 846 பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. 846 பணியிடங்களுக்கு 4 லட்சத்து 89 ஆயிரத்து 884 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, ஒரு பணியிடத்துக்கு 579 பேர் இப்போதே போட்டிக்குத் தயாராக உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1,270 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், சுமார் 5 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்து, சுமார் 4 லட்சத்து 18 ஆயிரம் பேர் முதல்நிலைத் தேர்வை எழுதியிருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    Advertisement

    குரூப்-4 பணியிடங்களுக்கு 3.38 லட்சம் பேர் விண்ணப்பம்:

    இது ஒருபுறமிருக்க, டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் வெளியிட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை 3.38 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், வரி தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர், வனக்காவலர், முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் ஆகிய பதவிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 574 காலி இடங்களுக்கான குரூப்-4 அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 6-ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

    இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 5-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    The preliminary examination for Group-2 and 2A posts, covering 846 vacancies, is scheduled to be held on the 1st of this month. There are 579 candidates competing for each available position. The Tamil Nadu Public Service Commission (TNPSC) released the hall tickets for the applicants yesterday. Reports indicate that 489,884 candidates have applied for these 846 vacancies.