TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! அதிகரிக்கும் பணியிடங்கள்? தமிழக அரசு பிளான்

  • சென்னை: அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப மனிதவளத் துறை அறிவுறுத்தியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின்படி அனைத்து போட்டித் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், புதிய காலிப்பணியிடங்கள் வந்தால் பிற்சேர்க்கை அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை எதிர்பார்த்து பல லட்சக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர். அரசு வேலை தான் கனவு என நினைத்து படித்து வரும் இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    Advertisement

    அதிக அளவில் காலிப்பணியிடங்கள்

    புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறைகளில் மாற்றங்கள் இருந்து வரும் நிலையில், அரசுத் துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுமா என தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் தான் தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    "அரசுத் துறைகளில் அதிக அளவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மனிதவளத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவது குறித்து டிஎன்பிஎஸ்சி உடன் ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான அறிவிப்புகளும் திட்டமிட்ட கால அட்டவணைப்படி வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.

    Advertisement

    இதன் முதல் கட்டமாக, நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மே 20-ம் தேதி வெளியிடப்பட்டு, தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும் புதிய பணியிடங்கள் அரசால் அறிவிக்கப்படும் பட்சத்தில், அதற்கான பிற்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும் அதே நடைமுறையில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும்.

    மின் வாரியத்தில் 15 ஆயிரம் பணியிடம்

    குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த அறிவிப்பில் பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களும் இடம்பெறும். இதேபோல் மற்ற அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு முடிவுகளும் விரைவாக அறிவிக்கப்படும்.

    Advertisement

    கடந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டும் பல்வேறு அரசுப் பல்கலைக்கழகங்களிலிருந்து ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான விவரங்கள் கிடைத்து வருகின்றன. அந்தப் பதவிகளின் தன்மைக்கு ஏற்ப அவை குரூப்-2 அல்லது குரூப்-2ஏ தேர்வுகளுடன் இணைத்து நிரப்பப்படும்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 15 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணியிடங்களும் படிப்படியாக டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    குரூப் 4 பணியிடம் அதிகரிக்குமா?

    கடந்த சில ஆண்டுகளாக குரூப்-4 தேர்வுகளில் குறைவான எண்ணிக்கையிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதனால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குரூப்-4 தேர்வில் கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்வர்களின் இந்த எதிர்பார்ப்பை விஜய் தலைமையிலான அரசு நிறைவேற்றி, மேலும் பல காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமா என்பது இனி தெரியவரும்.

    English Summary

    TNPSC Chairman S.K. Prabhakar said the government has directed departments to fill vacancies quickly. Recruitment exams will be conducted as per the 2026 schedule, and additional notifications may be issued if more vacancies are reported by government departments.