அபுதாபி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று ரகசியமாக அபுதாபிக்கு பயணித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. அதுமட்டுமின்றி ஏதோ பெருசா நடக்கப்போகுதோ என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
பொதுவாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால் நேற்று ரகசியமாக நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகம் சென்று ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசி உள்ளார் இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக இந்த சந்திப்பின் நோக்கம் என்ன? பின்னணி என்ன? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், வெளியுறவுத்துறை அமைச்சகம் அல்லது இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து ரகசியம் காக்கப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பை இஸ்ரேலை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார். இதனால் தான் பெஞ்சமின் நெதன்யாகு - ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலையில் உள்ளன. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் மட்டும் விதிவிலக்காக இஸ்ரேலுடன் ஓரளவு சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான். அமெரிக்காவிற்கு இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்கா தலையீட்டில் இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஆபிரகாம் ஒப்பந்தம் கையெழுத்தானத. இதன்மூலம் இரநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு துறை, தொழில்நுட்பத்துறை உள்ளிட்டவற்றில் உறவுகள் மெல்ல வலுப்பட தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை போரை தொடங்கின. இந்த போரின்போது ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஏராளமானவர்களை பணையக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக தான் இஸ்ரேல், காசா மீது போரை தொடங்கியது. ஆனால், இஸ்ரேலுக்கும் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு ஒன்றரை வாரங்களுக்கு முன்பாகவே இஸ்ரேலுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வார்னிங் ஒன்றை கொடுத்ததாகவும், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஏதோ தாக்குதலுக்கு ரெடியாகி வருகிறது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின்அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சார்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு வார்னிங் செய்ததாகவும் செய்திகள் வெ ளியாகின. இந்த செய்தியை இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த வார்னிங்கை நெதன்யாகு கண்டுக்கொள்ளவில்லை. இதுபற்றி இஸ்ரேல் உளவுத்துறைக்கும் தகவல் அளிக்கவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இதனை பெஞ்சமின் நெதன்யாகு முற்றிலுமாக மறுத்தார். செய்தி வெளியிட்ட ஹாரெட்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் இருதலைவர்கள் இடையேயான சந்திப்பு சாதாரணமாக நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் ஏதோ பெரிய விஷயம் உள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.