குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு

  • அரியலூர்: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்வியால் திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறவுள்ளன. தோல்விக்கான காரணத்தை திமுக மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் தவெக குறை பிரசவத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது, இந்த ஆட்சி நீடிக்காது என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

    Advertisement

    அரியலூரில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், "13 சீட்டும் ஜோக்கராக இருந்தால் எப்படி என்பார்கள். அப்படி தவெக ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் எல்லோரும் ஜோக்கர்களாக உள்ளனர். இந்த தேர்தல் தோல்வி, கொளத்தூரில் ஏற்பட்ட தோல்வி தொண்டர்கள் மனதில் ஆறாத வடுவாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட முதலமைச்சரை இழந்துவிட்டோம் என்று பொது மக்களே வருத்தப்படுகிறார்கள்.

    Advertisement

    விஜய் முதலமைச்சரல்ல

    35 சதவீதம் பேர் தான் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ளனர். அதில் 20 சதவீதம் பேர் நடுநிலை வாக்காளர்கள். குழந்தைகளை வைத்து திசை திருப்பி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்புளூசியர்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கி, அவர்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாற்றினார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் மனதில் தவறான சிந்தனைகளை பதிய வைத்துள்ளனர்.

    பெரிய மாற்றம் என்றால் 40 சதவீதம் மேல் வாங்கியிருக்க வேண்டும். இது நீடித்து நிலைக்காது. இது நீர் குமிழ் போன்றது. இதே வாக்குகளை அவர்கள் மீண்டும் வாங்க முடியாது. அதனால் தான் அதிமுகவில் இருந்து ஆள்களை வலை வீசி பிடிக்கிறார்கள். அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மூலம் தங்களின் அமைப்பை வலுப்படுத்த பார்க்கிறார்கள். தவெகவில் அமைப்பு இல்லை. இனி தவெக தான் அதிமுக என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார்.

    Advertisement

    குறை பிரசவத்தில் ஆட்சி

    எந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்தார்களோ, அது அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. இப்படி ஒரு ஆட்சி அமைந்திருக்க கூடாது என்று பலர் பேசத் தொடங்கிவிட்டனர். ஏறிய வேகத்தில் இறங்க தொடங்கியுள்ளனர். தவெக வில் விஜய் முதலமைச்சரே அல்ல. உண்மையான முதலமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான். அவர் தான் நிழல் முதலமைச்சராக இயக்கி கொண்டிருக்கிறார். விவசாய கடன் தள்ளுபடி என சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளனர்.

    திமுக பார்க்காத தோல்வி இல்லை. 10 வருடம் எதிர்க்கட்சியாக இருந்தோம். குறை பிரசவத்தில் பெற்ற தவெக வெற்றி நீண்ட நாட்கள் நிலைக்காது. முதலில் அமைச்சர்களுக்கு பேசுவதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். தவெகவின் தவறுகளை மக்களிடத்தில் எடுத்த செல்ல வேண்டும். நாம் எல்லா திட்டங்களை செய்துள்ளோம் என்பது மட்டுமே வெற்றியை கொடுக்காது. குறுக்கு வழியில் வருவோரை தடுப்பதும் நம் பணி தான்" என்றார்.

    English Summary

    Sivasankar: DMK former Minister Sivasankar said, All the ministers of TVK are joker. Vijay is not real CM. TVK win is temporary. DMK will win again.