நீச்சல் குளத்தில் திடீரென பாய்ந்த மின்சாரம்.. ஆனந்த குளியல் போட்ட 2 வெளிநாட்டினர் பலி.. பெங்களூர் ஹோட்டலில் சோகம்

  • பெங்களூர்: பெங்களூர் தனியார் ஹோட்டலில் 3வது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட 2 வெளிநாட்டினர் பரிதாபமாக இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற அமெரிக்கர் உள்பட நம் நாட்டை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் என 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு நீச்சல் குளத்தில் திடீரென்று மின்சாரம் பாய்ந்தது தான் காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Advertisement

    பெங்களூர் ஹலசூருவில் பிரபலமான கான்ராட் என்ற 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் 3வது மாடியில் நீச்சல் குளம் உள்ளது. இந்த ஹோட்டலில் வெளிநாட்டினர் உள்பட பெரும் பணக்காரர்கள் தங்கி செல்வார்கள்.

    Advertisement

    இந்த ஹோட்டலில் கடந்த 20ம் தேதி முதல் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் மாக்சிமிலியன் (59) தங்கி இருந்தார். 'லுப்தான்சா' விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஐபிஎம் ஐடி நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராக இருக்கும் ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த ஜூராஜ் ஹோர்வாட் நேற்று தனது குடும்பத்துடன் ஹோட்டலில் தங்கினார்.

    நேற்று மாலையில் அலெ க்சாண்டர் மாக்சிமிலியன், ஜூராஜ் ஹோர்வார்ட் என 2 பேரும் நீச்சல் குளத்தில் ஆனந்த் குளியல் போட்டனர். அப்போது திடீரென்று இருவரும் தண்ணீரில் துடிதுடித்து இறந்தனர். நீச்சல் குளத்தில் திடீரென்று பாய்ந்த மின்சாரத்தால் இவர்கள் 2 பேரும் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதுமட்டுமின்றி இவர்கள் 2 பேரையும் காப்பாற்ற அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ டிசாண்டீஸ் (41), ஹோட்டல் ஊழியரான ராகுல் திவாரி (28) ஆகியோர் முயன்றனர். அவர்கள் 2 பேரும் காயமடைந்தனர். மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக இறந்த ஜூராஜ் ஹோர்வார்ட் மனைவி ஹலசூரு போலீசில் புகார் செய்தார். ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம் தான் எனது கணவர் உள்பட 2 பேரின் சாவிற்கு காரணம் என்று புகாரில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த 2 பேரின் உடல்களும் கைப்பபற்றப்பட்டு மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Two foreigners died tragically after an electric current suddenly surged into a swimming pool in Bengaluru where they were enjoying a swim. An American national and a hotel employee, who attempted to rescue them, sustained injuries.