பெங்களூர்: பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிக்கும் 60 அடி ஆழ தொட்டிக்குள் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 தொழிலாளர்கள் விழுந்தனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டு வரும் நிலையில் இருவரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் (BWSSB or Bangalore Water Supply and Sewerage Board) சார்பில் வர்த்தூர் அருகே பெலகெரே பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள சாக்கடைகளில் வழிந்தோடும் கழிவுநீர் இந்த தொட்டியில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
இந்நிலையில் தான் கழிவுநீர் சுத்திகரிக்கும் தொட்டியில் உள்ள 3 கேட்டுகளில் பிரச்சனை ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி நேற்று நடந்தது.நேற்று மாலை 6.30 மணியளவில் 3 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை சேர்ந்த அகிலன் மோகன், பீகாரை சேர்ந்த பிரிஜேஷ் குமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்கள் கழிவுநீர் சுத்திகரிக்கும் 60 அடி ஆழ தொட்டிக்குள் விழுந்தனர். இதில் அகிலன் மோகன், பிரிஜேஷ் குமார் ஆகியோர் மூழ்கினர். கார்த்திக் அதிர்ஷ்டவசமாக மேலே வந்தார். உடனடியாக அவர் பிற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஊழியர்கள், அதிகாரிகள் கார்த்திக்கை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளையில் தமிழகத்தை சேர்ந்த அகிலன் மோகன், பீகாரை சேர்ந்த பிரிஜேஷ் குமார் ஆகியோரை அவர்களால் மீட்க முடியவில்லை. அவர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இந்த பணி நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி தீயணைப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தொட்டிக்குள் விழுந்த 2 தொழிலாளர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த பணி சவாலாக உள்ளது. 2 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு தான். தொடர்ந்து தேடி வருகிறோம்'' என்றார். இதனால் இருவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே தான் இந்த சம்பவம் பற்றி விசாரிக்க பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை இன்ஜினியர் கேஎன ராஜீவ், கூடுதல் முதன்மை இன்ஜினியர் ரேணுகுமார் துணை முதன்மை ின்ஜினியர் வினுதா ஆகியோர் கொண்ட குழு சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.