31 கி.மீ. செல்ல 2.5 மணி நேரம்.. பெங்களூரு டிராபிக்கை பார்த்து இன்போசிஸ் இணை நிறுவனர் வேதனை!

  • பெங்களூர்: பெங்களூரில் டிராபிக் பாதிப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இதற்கிடையே இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் அங்கு டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை விளக்கும் வகையில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூர், போக்குவரத்து நெரிசலுக்கும் கூட தலைநகராகவே இருக்கிறது. அங்கு சும்மா சில கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்குச் செல்லவே மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். சாலைகளில் வாகனங்களும் கூட இன்ச் பை இன்ச்சாக தான் நகரும். இதுபோல பெங்களூர் டிராபிக்கில் மணிக்கணக்கில் வாகனங்களில் சிக்கித் தவிக்கும் அனுபவத்தைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

    Advertisement

    இன்போசிஸ் இணை நிறுவனர்

    இதற்கிடையே இன்போசிஸ் இணை நிறுவனரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தனது அனுபவத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "31 கிலோமீட்டர் தூரம் பயணிக்க சுமார் 2½ மணி நேரம் ஆனது" என்று குறிப்பிட்டு, பெங்களூரின் போக்குவரத்து நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில், "இன்று 31 கிமீ செல்ல 2½ மணி நேரம் ஆனது. நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசல், சாலைகளின் மோசமான நிலை மற்றும் போக்குவரத்து ஒழுங்கை பின்பற்றாத ஓட்டுநர்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்" என்று கிரிஸ் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    நெட்டிசன்கள்

    அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக டிரெண்டானது. இதையடுத்து ஏராளமானோர் தங்களும் இதேபோன்ற அனுபவங்களைத் தினமும் சந்தித்து வருவதாகக் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "கடந்த வாரம் 28 கிலோமீட்டர் தூரம் செல்ல எனக்கு 3 மணி நேரம் ஆனது. சாலைகள் மேம்படும் வரை மற்றும் போக்குவரத்து நிர்வாகம் சீராகும் வரை நிறுவனங்கள் ஒர்க் ஃபர்ம் ஹோம் அல்லது ஹைபிரிட் முறையை அதிகப்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டார்.

    ஒர்க் ஃபர்ம் ஹோம்

    பலரும் ஐடி நிறுவனங்கள் வாரத்தில் சில நாட்களாவது வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை அனுமதித்தால், நகரின் போக்குவரத்து சுமை ஓரளவு குறையும் என்று கருத்து தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர், தனியார் வாகனங்களை விட மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று வலியுறுத்தினர்.

    Advertisement

    மற்றொரு நபர், "வார இறுதி நாட்களிலாவது பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். தற்போதுள்ள சாலை வசதியால் இவ்வளவு அதிக வாகனங்களை சமாளிக்க முடியவில்லை" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். மேலும் பலர், பெங்களூர் இந்தியாவின் ஐடி மையமாக வேகமாக வளர்ந்தாலும், அதற்கு ஏற்ப சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ திட்டங்கள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு வளரவில்லை என்று சுட்டிக்காட்டினர்.

    கோரிக்கை

    பலரும் மெட்ரோ திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும், புதிய சாலைகள் அமைக்க வேண்டும், போக்குவரத்து விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் மற்றும் நகர திட்டமிடலை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

    Advertisement

    இந்த டிராபிக் பாதிப்பில் உள்ள மற்றொரு சிக்கலை நெட்டிசன் விளக்கியுள்ளார். அதாவது அவர், "31 கிலோமீட்டர் செல்ல 2½ மணி நேரம் ஆகிறது என்பது சாதாரண பிரச்சனை அல்ல. இது மக்களின் நேரத்தையும், உடல் மற்றும் மன ஆற்றலையும் உறிஞ்சி வருகிறது. கட்டுப்பாடற்ற வளர்ச்சி, போக்குவரத்து சிக்கல் மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களே இதற்குக் காரணம்" என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Infosys co-founder Kris Gopalakrishnan has sparked fresh debate over Bangalore worsening traffic(பெங்களூரில் உச்சமடையும் டிராபிக் சிக்கல்): Bangalore Traffic latest news in tamil.