பெங்களூருவுக்குள் நுழைந்த யானை.. நடைபயிற்சிக்கு போன முதியவருக்கு நேர்ந்த கதி! உயிரே போச்சே

  • பெங்களூர்: பெங்களூர் புறநகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் நடைப்பயிற்சிக்கு சென்ற 60 வயது நிரம்பிய முதியவரை காட்டு யானை ஒன்று விரட்டி மிதித்து கொன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

    Advertisement

    பெங்களூர் புறநகர் அஞ்சேபாளையா அருகே வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 60). இவர் தினமும் காலையில் 'வாக்கிங்' செல்வது வழக்கம்.

    Advertisement

    அந்த வகையில் இன்று காலையில் நாகராஜ் மல்ஹார் அவென்யூ பகுதியில் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தார். இந்த இடம் என்பது பன்னரக்கட்டா வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

    அப்போது பன்னரக்கட்டா வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியே வந்தது. 'வாக்கிங்' சென்ற நாகராஜை விரட்டிய அந்த யானை மிதித்து கொன்றது. இதுபற்றி அறிந்தவுடன் வனத்துறையினர், போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நாகராஜ் வாக்கிங் போனபோது அவருக்கு பின்னால் காட்டு யானை ஒன்று விரட்டி செல்வது பதிவாகி இருந்தது. இதனால் காட்டு யானை தான் நாகராஜை கொன்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    Advertisement

    அதுமட்டுமின்றி நாகராஜை காட்டு யானை விரட்டி சென்ற சிசிடிவி கேமரா தொடர்பான காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது. நாகராஜை கொன்ற யானை பிஎம் காவல் வனப்பகுதி நோக்கி சென்றுவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்தவுடன் வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மருத்துவமனைக்கு சென்று நாகராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிறகு ரூ.20 லட்சம் நிவாரணமாக அறிவித்தார். இதுபற்றி ராமலிங்க ரெட்டி கூறுகையில், ''பொதுமக்களுக்கு யானை நடமாட்டம் பற்றி வார்னிங் செய்யப்பட்டுள்ளது. வனததுறையினர் நேற்று நள்ளிரவு 1 மணி வரை யானை நடமாட்டத்தை கண்காணித்தனர். இனி குடியிருப்பு பகுதிக்குள் நுழையாது என்று நினைத்து சென்றனர்.

    Advertisement

    இப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வனத்துறையினருக்கு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். நாகராஜை கொன்ற யானையை கண்டுபிடிக்க 100 வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த யானையை பிடிக்க துபாரே யானைகள் முகாமில் இருந்து 4 கும்கி யானை நாளை காலையில் வரழைக்கப்படுகிறது'' என்றார்.

    English Summary

    Bengaluru Elephant Trampled: A shocking incident has occurred in Bengaluru where a 60-year-old man, who had gone for a walking around 5 a.m., was chased and trampled to death by a wild elephant.