7வது மாடியில் உச்சக்கட்ட வாக்குவாதம்.. பெங்களூரில் தமிழ் காதல் ஜோடிக்கு நேர்க்க கதி!

  • பெங்களூர்: புதுச்சேரியை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, பெங்களூரில் தனியார் விடுதியின் மொட்டை மாடியிலிருந்து விழுந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், இளம்பெண் உயிரிழந்த நிலையில், இளைஞர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுச்சேரியை சேர்ந்தவர் இளைஞர் மணிச்சவேலு(30), இவரும் இதே பகுதியை சேர்ந்த ஜனனி (23) எனும் இளம்பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

    இப்படி இருக்கையில் சமீபத்தில் மணிச்சவேலுவுக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பிரச்சனை குறித்து பேசி தீர்க்க, மணிச்சவேலு ஜனனியை சந்திக்க பெங்களூர் ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று சென்றிருக்கிறார். அங்கு 7வது மாடியில்.. மொட்டை மாடியில் இருவருக்கும் பேசிக்கொண்டிருந்தபோது வாக்குவாதம் வெடித்தது.

    இந்த வாக்குவாதம் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஒரு கட்டத்தில் திடீரென ஜனனி மாடியிலிருந்து விழுந்தார். அடுத்த நொடி அவருக்கு பக்கத்தில் மணிச்சவேலுவும் கீழே விழுந்திருக்கிறார். இருவரையும் உடனடியாக மீட்ட அக்கம் பக்கத்தினர்.. அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ஜனனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மணிச்சவேலு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் ஒயிட்ஃபீல்டு போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இப்போது வரை இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது தற்கொலையா? அல்லது கொலையா? தவறி விழுந்தார்களா? என்பது தெரியவில்லை. ஒருவேளை தவறி விழும்போது மணிச்சவேலுவை பிடித்து ஜனனி இழுத்தாரா என்பதும் மணிச்சவேலு சொன்னால்தான் தெரியவரும்.

    இது குறித்து வாக்குமூலம் அளிக்க மணிச்சவேலு தயாராக இல்லை. தற்போது அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டாலும்.. அவரால் பேச முடியவில்லை என்பதால், போலீசாரால் வாக்குமூலம் வாங்க முடியவில்லை. மரக்கிளைகளில் தடுக்கப்பட்டு விழுந்ததால் மணிச்சவேலு உயிருடன் தப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    A shocking incident has occurred in Bengaluru where a young couple from Puducherry fell from the terrace of a private lodge. The young woman died, while the young man is undergoing treatment in the hospital in critical condition.