பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு!

  • பெங்களூர்: உலகப் பொதுமறை தந்த வள்ளுவனின் புகழை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் உலகத் திருக்குறள் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

    Advertisement

    கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள புனிதர் ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூர் திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய்மொழிக் கூட்டமைப்பு ஆகியவை கூட்டாக இணைந்து இந்த ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இம்மாநாடு வரும் 2026 ஜூலை 5-ம் தேதி பெங்களூரில் உள்ள புனிதர் ஜோசப் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

    Advertisement

    இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய்மொழிக் கூட்டமைப்பின் தலைவரான முனைவர் எஸ்.டி.குமார் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

    மாநாட்டில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தனித்தனியே அடையாள அட்டைகள் வழங்கப்படும். அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மாநாட்டு வளாகத்தில் அனுமதி என்பதால், முன்னனுமதி பெறுவது அவசியமாகிறது. எனவே, மாநாட்டில் பங்கெடுக்கும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் முன்கூட்டியே தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.டி.குமாரை தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

    Advertisement

    பெங்களூரு தவிர்ந்து, கர்நாடக மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து இந்த மாநாட்டிற்கு வரத் திட்டமிட்டுள்ள தமிழ் அமைப்புகள், தங்களுடைய விபரங்களை உடனடியாகத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள், மாநாட்டிற்கு வருகை தரும் பிரதிநிதிகளின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் தமிழ் அமைப்பின் பெயர் ஆகிய விபரங்களை மேற்கண்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அவ்வாறு முன்கூட்டியே பதிவு செய்யும் வெளி மாவட்டத் தமிழ் அமைப்புகளுக்குப் பிரத்தியேக அடையாள அட்டைகள் வழங்கப்படுவதோடு, அவர்கள் பெங்களூரில் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளும் மாநாட்டுத் தயாரிப்புக் குழுவின் சார்பில் முழுமையாகச் செய்து தரப்படும் என முனைவர் எஸ்.டி.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

    Advertisement

    கர்நாடக மண்ணில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் போற்றும் வகையில் அமையவுள்ள இந்த மெகா மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தற்போதே பெங்களூரில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன!

    English Summary

    7th World Thirukkural Conference is set to take place at St. Joseph's University in Bengaluru(பெங்களூரில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாடு): Thirukkural World Conference latest news in tamil.