விஜய் வர்றாரு.. எல்லாத்தையும் உடனே மாத்துங்க.. டிகே சிவக்குமார் உத்தரவால் மாறும் பெங்களூர் விதான சவுதா

  • பெங்களூர்: தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களூர் சென்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரை சந்தித்து பேசி வருகிறார். மேகதாது அணை கட்டும் விவகாரம், காவிரி நீர் பங்கீடு செய்வதில் உள்ள பிரச்சனைகள் பற்றி இருவரும் விவாதிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் விஜய்யின் வருகையொட்டி பெங்களூர் விதானசவுதாவில் புனரமைப்பு பணிகள் தீவிரமாகி உள்ளது.

    Advertisement

    தமிழகத்துக்கும், கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. இன்று முதல் தமிழகத்துக்கு அடுதத 15 நாட்கள் தினமும் 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.

    Advertisement

    இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனால் தற்போது பெங்களூர் உள்பட பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி வரும் 31ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரின் அழைப்பை ஏற்று பெங்களூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    ஆகஸ்ட் 3ம் தேதி மதிய வேளையில் விஜய் பெங்களூர் விதான சவுதாவிற்கு (கர்நாடகா சட்டசபை) செல்வார் என்று சொல்லப்படுகிறது. அங்கு முதல்வர் டிகே சிவக்குமாரை சந்தித்து பேச உள்ளார். இவர்களின் சந்திப்பின்போது விவாதிக்கப்படும் விவகாரங்கள் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

    Advertisement

    இருப்பினும் விஜய் - டிகே சிவக்குமார் ஆகியோர் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் பற்றி இருவரும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் கர்நாடகாவிற்கு செல்லக்கூடாது என்று தமிழகத்தில் திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் விஜய் பெங்களூர் புறப்பட தயாராகி வருகிறார்.

    இந்நிலையில் தான் விஜய்யின் வருகையையொட்டி பெங்களூர் விதானசவுதா புனரமைக்கப்பட்டு வருகிறது. விஜய் உடன் பெங்களூர் விதான சவுதாவில் உள்ள கான்பரன்ஸ் ஹாலில் பேச்சுவார்த்தை நடத்த டிகே சிவக்குமார் முடிவெடுத்துள்ளார். இதனால் அந்த கான்பரன்ஸ் ஹாலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கான்பரன்ஸ் ஹாலுக்கு செல்லும் வழியில் உள்ள சுவர்களில் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. அதேபோல் சேதமடைந்த கதவுகள், இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் கன்னட ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

    Advertisement

    இருப்பினும் விஜய், பெங்களூர் செல்வதாக கூறப்பட்ட சமயத்தில் கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தமிழகத்துக்கு இன்று முதல் 15 நாட்கள் தினமும் 3,500 கனஅடி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று நேற்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டதை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர், மைசூரு, மண்டியா உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் விஜய் கர்நாடகா செல்வாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay traveled to Bengaluru on August 3rd and is currently meeting with Karnataka Chief Minister D.K. Shivakumar. While the two are expected to discuss issues regarding the construction of the Mekedatu dam and the sharing of Cauvery river water, renovation work at the Vidhana Soudha in Bengaluru has intensified in anticipation of Vijay's visit.