பெங்களூர்: காவிரி பிரச்சனைக்கு நடுவே கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் பிடிஎம் லே-அவுட் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவான ராமலிங்க ரெட்டியிடம் இருந்து நீர்ப்பாசனத்துறை பறிக்கப்பட்டு வனத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் காவிரி போராட்டத்துக்கு தொடக்கப்புள்ளியாக இருக்கும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த செலுவராயசாமியிடம் நீர்ப்பாசனத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய நீர் பாசனத்துறை அமைச்சராகி உள்ள செலுவராயசாமி யார்? பின்னணி என்ன? முதல்வர் டிகே சிவக்குமாரின் கணக்கீடு என்ன?என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவிற்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை நீடித்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கூறியும் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு அதனை உரிய முறையில் பின்பற்றுவது இல்லை. நேற்றைய தினம் கூட காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆராய்ந்து தான் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இப்படியான சூழலில் தான் திடீரென்று கர்நாடகாவில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்த பிறகு டிகே சிவக்குமார் 2 மாதங்களுக்கு முன்பாக முதல்வரானார். அவரது அமைச்சரவையில் பெங்களூர் பிடிஎம் லே-அவுட் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராமலிங்க ரெட்டி நீர்ப்பாசனத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ராமலிங்க ரெட்டியிடம் இருந்து நீர்ப்பாசனத்துறை பறிக்கப்பட்டுள்ள அவருக்கு வனம், சுற்றுச்சூழல் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் டிகே சிவக்குமார் அமைச்சரவையில் புதிதாக அமைச்சராக பதவியேற்ற செலுவராய சாமியிடம் நீர்ப்பாசனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது செலுவராய சாமியிடம் கர்நாடகா மாநில பெரிய மற்றமு் நடுத்தர நீர்ப்பாசனத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த செலுவராயசாமி மண்டியா மாவட்டம் நாகமங்கலா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ ஆவார். இவர் முதலில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டு அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். 1999, 2004, 2013 என 3 முறை மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். தற்போது முதல்வர் டிகே சிவக்குமாரின் ஆதரவாளராக உள்ளார். டிகே சிவக்குமாரும் (ராமநகர்), செலுவராயசாமியும் (மண்டியா) பக்கத்து பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதோடு இருவரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த இலாகா மாற்றத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் காவிரி. செலுவராயசாமி மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை தான் தமிழகத்திற்கு காவிரி நீர் தருவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் எப்போதெல்லாம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது முதலில் போராட்டம், எதிர்ப்பு குரல் மண்டியா மாவட்டத்தில் இருந்து தான் தொடங்கும். இதனால் அதனை சமாளிக்க செலுவராயசாமியை டிகே சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் டிகே சிவக்குமார் தீவிரமாக உள்ளார். இந்த மேகதாது என்ற இடம் டிகே சிவக்குமார் எம்எல்ஏவாக உள்ள ராமநகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதிக்குள் வரும். இதனால் தனக்கு நெருக்கமான அதேவேளையில் காவிரி பிரச்சனை வெடிக்கும் பகுதியை சேர்ந்த மண்டியா மாவட்டத்தை சேர்ந்த செலுவராயசாமிக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை இலாகாவை டிகே சிவக்குமார் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.