பெங்களூர்: பெங்களூரில் குடிநீரை வீணாக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததன் காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் குடிநீரை வீணாக்கக்கூடாது என்றும், குடிநீரை நீச்சல் குளங்களில் பயன்படுத்தக்கூடாது எனவும், இந்த விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் எல் நினோ தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் குடிநீரை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அத்தியாவசியமற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.
எல் நினோ தாக்கம் காரணமாக தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. கர்நாடகாவிலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதன் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பவில்லை. போதிய நீர் இருப்பு இல்லாத காரணமாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால், பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதாவது, வாகனங்களைக் கழுவுதல், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், சாலைகள் மற்றும் நடைபாதைகளை சுத்தம் செய்தல், கட்டுமானப் பணிகள் போன்ற அத்தியாவசியமற்ற பயன்பாடுகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பருவமழை 39.98 சதவீதம் பற்றாக்குறையாக பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1901-ஆம் ஆண்டு முதல் வானிலை பற்றிய பதிவுகள் தொடங்கியதிலிருந்து இது 5-வது மிக வறண்ட ஜூன் மாதமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. இதே நிலை நீடித்தால் நாட்டில் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த கட்டுப்பாடுகளை பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பெங்களூரில் 1.40 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டியது அவசியமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை காரணமாக அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. அதனால் பெங்களூரில் குடிநீர் வீணாவதை தடுப்பது அவசியம் ஆகும். அதனால் நகர மக்கள் குடிநீரை எச்சரிக்கையுடன் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, குடிநீரை நீச்சல் குளங்களில் பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க்கப்படும். அதன் பிறகும் விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராத்துடன் தினமும் ரூ.500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும். கார்கள் கழுவதல், வீட்டு தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். குடிநீரை யாராவது தவறாக பயன்படுத்தினால் அதுகுறித்து பொதுமக்கள் 1916 என்ற உதவி மையத்துக்கு புகார் தெரிவிக்கலாம். இந்த தடை உத்தரவு மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் நீச்சல் குளங்களுக்கு பொருந்தாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பருவமழை குறைவு
குடிநீர் வீணாவதை தவிர்க்க
ரூ.5 ஆயிரம் அபராதம்