ஒரே ரூம் வீட்டிற்கு ரூ.36,000 வாடகை.. பெங்களூரில் கண்ணை கட்ட வைக்கும் செலவுகள்.. அம்மாடியோவ்!

  • பெங்களூர்: பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வாழ்க்கைச் செலவு என்பது எப்போதும் ஒரு விவாதப் பொருளாகவே இருக்கிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியை வாடகைக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் செலவிடுவதாகப் புகார்கள் எழுவதுண்டு. இது தொடர்பாகப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    நமது நாட்டின் ஐடி தலைநகராக இருப்பது பெங்களூர்.. அங்குள்ள ஐடி நிறுவனங்களில் பல இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். இருப்பினும், பெங்களூரில் வாழ்வது காஸ்ட்லி ஆகிக் கொண்டே போவதாகவே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்கு வீட்டு வாடகை தொடங்கி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

    Advertisement

    செலவுகள்

    இதற்கிடையே பெங்களூரில் தனியாக வசிக்கும் ஸ்ருதி என்ற இளம்பெண், தனது ஒரு மாதச் செலவுகளைப் பட்டியலிட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்ருதி பெங்களூரில் புராடக்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூரின் மிகவும் பிரபலமான மற்றும் வசதியான குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் HSR லேஅவுட் பகுதியில் வசித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், தான் எங்கு வசிக்கிறேன், எவ்வளவு வாடகை கொடுக்கிறேன் என்பது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பட்ஜெட் விவரங்களைப் பகிர்ந்துள்ளார்..

    Advertisement

    வாடகை மட்டும் ரூ.36,000

    HSR லேஅவுட் பகுதியில் ஒரு படுக்கையறை கொண்ட (1BHK) வீட்டில் அவர் வசிக்கிறார். இதற்காகவே அவர் மாதம் 36,000 ரூபாய் வாடகையாகச் செலுத்துகிறாராம். பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள வசதியான பகுதியாக இருப்பதாலேயே 1BHK வீட்டிற்கே இவ்வளவு வாடகையைச் செலுத்துகிறார். இது தவிர வீட்டிற்குத் தேவையான கட்டில், சோபா போன்ற பர்னிச்சர்கள் மற்றும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை அவர் விலைக்கு வாங்காமல் வாடகைக்கு எடுத்துள்ளார். இதற்காக மாதம் 5,000 ரூபாய் செலவிடுகிறார்.

    இதர செலவுகள்

    இது தவிர வீட்டைச் சுத்தம் செய்யும் பணி மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து மாதம் சுமார் 4,000 ரூபாய் செலவாகிறது. ஸ்ருதி பெரும்பாலும் வீட்டிலேயே சமைப்பதை வழக்கமாக்க கொண்டுள்ளார். ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதால், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்காக மாதம் 7,000 முதல் 8,000 ரூபாய் வரை செலவிடுகிறார். அலுவலகம் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று வர போக்குவரத்துக்காக மாதம் 4,000 முதல் 5,000 ரூபாய் வரை செலவாகிறதாம். தனது உடல்நலனில் அக்கறை காட்டும் ஸ்ருதி, ஜிம் மெம்பர்ஷிப் உள்ளிட்ட உடற்பயிற்சி வகுப்புகளுக்காக மாதம் 5,000 ரூபாய் செலவிடுகிறார்.

    Advertisement

    காபி குடிப்பது, நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிடுவது ஆகியவற்றுக்கு செலவாகும் தொகை ஒவ்வொரு மாதமும் மாறுபடும் என்று அவர் கூறுகிறார். இது தனது மனக்கட்டுப்பாட்டைப் பொறுத்தது என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஷாப்பிங் மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குவதற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.

    செலவு ஓவர்

    தனது வீடியோவின் தலைப்பில், "பெங்களூரில் ஜாலியாக வாழ்வது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் எனது வங்கிக் கணக்கு அதை ஏற்க மறுக்கிறது" என்று ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார். அதாவது, சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செலவுகளுக்கே சரியாக இருக்கிறது என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ருதியின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பலரும் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

    Advertisement

    நெட்டிசன்கள்

    ஒரு சிலர் ஸ்ருதிக்கு ஆதரவாக.. ஒரு வசதியான பகுதியில், தரமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க இவ்வளவு செலவாவது இயல்புதான் என்று அவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பு ஒரு மாதத்திற்குச் சுமார் 60,000 ரூபாய் வரை செலவு செய்வது என்பது மிக அதிகம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். HSR லேஅவுட் போன்ற பகுதிகளைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் தங்கினால் வாடகை பாதியாகக் குறையும் என்று சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    ஸ்ருதியின் இந்த பட்ஜெட் விவரம், பெங்களூரில் நகரங்களில் வாழும் இளைஞர்களின் தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கிறது. வசதி, பாதுகாப்பு மற்றும் அலுவலகத்திற்கு அருகே வீடு போன்ற காரணங்களுக்காக அதிக வாடகை கொடுக்கப் பலர் தயாராக உள்ளனர். இருப்பினும், அது சேமிப்பை மிக பெரியளவில் காலி செய்கிறது.

    English Summary

    Female IT product manager listing her monthly budget in Bangalore's HSR Layout, including Rs 36,000 rent for a 1BHK(பெங்களூரில் ஒரு மாதம் வாழ்க்கை நடத்த எவ்வளவு செலவாகும்): Bangalore Cost of Living latest news in tamil.