அடுத்தடுத்து 3 படுகொலைகள்.. முதலில் காதலி, அடுத்து ரவுடி.. பெங்களூரை அதிர வைத்த சம்பவம்

  • பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் ஒரே நாளில் மூன்று கொடூர கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று வெவ்வேறு கொலை சம்பவங்களில் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெங்களூரில் வெறும் சில மணி நேர இடைவெளியில் நடந்த இந்த படுகொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பெங்களூருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து அரங்கேறிய மூன்று கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வெவ்வேறு பகுதிகளில் நடந்த இந்த கொடூர சம்பவங்களால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    காதலி படுகொலை

    முதலாவது சம்பவம் மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் அரங்கேறியுள்ளது. இங்கு 23 வயதான அஞ்சலி என்ற பெண், தனது காதலன் ராஜீவ் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வது குறித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்த நிலையில், ராஜீவின் குற்றப் பின்னணி காரணமாக அஞ்சலியின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் அஞ்சலியை ராஜீவ் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளியான ராஜீவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    மர்ம மரணம்

    இதனைத் தொடர்ந்து பொம்மனஹள்ளி அடுத்துள்ள முனியப்பா லேஅவுட் பகுதியில் மற்றொரு கொலை சம்பவம் பதிவாகியுள்ளது. அங்குள்ள வாடகை வீடு ஒன்றில் 40 வயதான கிருஷ்ணா பர்மன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இருப்பினும், அவர் தனக்குத் தெரிந்த நபர் ஒருவராலேயே கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொலையாளியைக் கண்டறியும் முயற்சியாக, அந்தப் பெண்ணை சமீப காலத்தில் தொடர்பு கொண்டோர் குறித்த லிஸ்ட்டை போலீசார் தயார் செய்து வருகிறார்கள். மேலும், அவர்கள் வீட்டிற்கு யார் எல்லாம் வந்து சென்றனர் என்பது குறித்த தகவல்களையும் சிசிடிவி மூலம் சேகரித்து வருகிறார்கள்.

    Advertisement

    ஓட ஓட வெட்டி கொலை

    இந்த இரு பரபரப்பு அடங்குவதற்குள், ஞாயிறு மாலை ஜே.பி. நகர் சாலையில் உள்ள ஐ.ஜி. சர்க்கிள் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மூன்றாவது கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ரவுடிப் பட்டியலில் இருந்த ராஜா என்ற 'ஹல்முக் ராஜா' என்பவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று வெட்டிப் படுகொலை செய்துள்ளது. மஞ்சள் போர்டு பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள், ராஜாவை வழிமறித்து அரிவாள்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர் படுகாயமடைந்து சாலையில் சுருண்டு விழுந்த பிறகும் கூட, அந்த கும்பல் அவரைத் தொடர்ந்து வெட்டியுள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

    Advertisement

    இந்த கொடூரக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராஜா, அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட ராஜா மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    10 ஆண்டு பகை

    இந்தத் தாக்குதல் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பகை காரணமாக நடத்தப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் அதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த மூன்று கொலைச் சம்பவங்கள் குறித்தும் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English Summary

    Bangalore was rocked by three separate murders within hours on Sunday(பெங்களூரில் அரங்கேறிய மூன்று கொடூர கொலை): Bangalore crime latest news in tamil.