500+ மாணவர்கள் திடீர் உடல்நலக்குறைவு.. 2 பேருக்கு H1N1 வேற.. பெங்களூர் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

  • பெங்களூர்: பெங்களூரில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல இருவருக்கு H1N1 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திடீரென இத்தனை பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இப்போது பருவமழை சீசன் ஆரம்பித்துவிட்ட நிலையில், பருவகால நோய் பாதிப்புகள் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. இந்த பருவகால பாதிப்புகள் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற போதிலும் திடீரென ஒரே இடத்தில் அவை அதிகம் பரவும்போது, அவை பேசுபொருளாகிறது. அப்படியொரு சம்பவம் தான் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது.

    Advertisement

    500+ மேற்பட்டோருக்கு பாதிப்பு

    பெங்களூரில் ரிச்சர்ட்ஸ் டவுன் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே உடல்நல பாதிப்பு அதிகரித்துள்ளது. சிலருக்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில், சிலருக்கு தொடர்ந்து இருமல் மற்றும் உடல்வலி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு H1N1 தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஊழியர் பெங்களூர் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பள்ளியை மூட பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    Advertisement

    பள்ளி நிர்வாகம்

    இதனிடையே பள்ளிக்கு வெளியே செயல்பட்டு வரும் தெருவோர உணவு கடைகள் குறித்தும் பள்ளி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் சுகாதார அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த கடைகளில் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே துரித உணவு விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

    பள்ளியை சுற்றியுள்ள அங்கீகரிக்கப்படாத கடைகளை அகற்றுவது, சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி அமைப்புகளிடம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், மாநகராட்சி சுகாதார அதிகாரி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    H1N1 என்றால் என்ன?

    H1N1 என்பது Influenza A வைரஸின் ஒரு வகை ஆகும். இது சுவாச பாதையைப் பாதிக்கும் நோயை ஏற்படுத்தக்கூடும். இதன் அறிகுறிகள் சாதாரண பருவகால காய்ச்சலை போலவே இருக்கும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தலைவலி, உடல்வலி மற்றும் அதிக சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். சில குழந்தைகளுக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.

    இன்ஃப்ளூயன்ஸா மிகவும் எளிதாகப் பரவும் ஒரு தொற்று ஆகும். பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது வெளியாகும் சுவாச துகள்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவும். பள்ளிகளில் வகுப்பறைகள், பள்ளி பேருந்துகள் என ஒரே இடத்தில் அதிகப்படியானோர் இருக்கும்போது இது வேகமாக பரவும் ஆபத்து இருக்கிறது.

    Advertisement

    மருத்துவமனைக்கு செல்லுங்கள்

    எனவே காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தலைவலி, உடல் மற்றும் தசை வலி, அதீத சோர்வு, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவருக்கு செல்வது சரியாக இருக்கும்! கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுவது, இருமல் மற்றும் தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது உள்ளிட்டவை மூலம் இந்த நோய் பரவலை தடுத்து நிறுத்த முடியும். மேலும், உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருப்பதும் தொற்று பரவலை குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    More than 500 students and 21 staff members at a Bangalore school have reported fever, cough, cold and body pain (பெங்களூரில் 500+ மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு): Bangalore School has nearly 500+ Students with flue symtoms.