காலாவதியான பால்.. பூஞ்சை பிடித்த காய்கறிகள்.. பெங்களூர் ஹோட்டல்களில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

  • பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல 3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை நடத்திய அதிரடி சோதனையில், பூஞ்சை பிடித்த காய்கறிகள், காலாவதியான பால், இறைச்சி மற்றும் பேக்கரி பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் பல ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படாததும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    கடந்த சில காலமாகவே ஹைதராபாத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கிடையே கர்நாடகாவிலும் இப்போது அதுபோல உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    Advertisement

    அதிரடி சோதனை

    பெங்களூர் முழுவதும் உணவு பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. பெங்களூர் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மொத்தம் 30 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுக்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டன. பெங்களூர் முழுக்க இருக்கும் 26 ஸ்டார் ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட்டன.

    காலாவதியான பொருட்கள்

    சோதனையின்போது பல ஹோட்டல்களின் சமையலறைகள் மற்றும் உணவு சேமிப்பு பகுதிகளில் சுகாதாரமற்ற நிலை இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், காலாவதியான உணவு பொருட்கள் முறையாக சேமிக்கப்படாமல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சில இடங்களில் காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களில் பூஞ்சை வளர்ந்திருந்ததும் தெரியவந்தது. பால், பால் பொருட்கள், பேக்கரி பொருட்கள் என காலாவதியான பல பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    Advertisement

    அது மட்டுமின்றி சிக்கன், மீன், இறைச்சி மற்றும் காய்கறிகளும் காலாவதியாகி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சில ஹோட்டல்களில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தனித்தனியாக வைக்கப்படாமல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். உணவு பொருட்களின் லேபிளிங், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கட்டாய விதிமுறைகள் தொடர்பான விதிமீறல்களும் கண்டறியப்பட்டன.

    பறிமுதல்

    சோதனையின்போது பல முன்னணி ஹோட்டல்களில் இருந்து பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து 76 கிலோ இறைச்சி மற்றும் 200 கிலோ காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 32 லிட்டர் காலாவதியான பாலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. அதேபோல இன்னொரு ஹோட்டலில் 105 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 50 கிலோ சிக்கன், 23 கிலோ இறைச்சி, 7 கிலோ மீன் மற்றும் 25 கிலோ காய்கறிகள் அடங்கும். வேறு சில நடச்சிதர ஹோட்டல்களில் இருந்தும் காலாவதியான உணவு பொருட்கள் கண்டறிந்து, அழிக்கப்பட்டன.

    Advertisement

    நோட்டீஸ்

    இந்த சோதனையின்போது பல நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து தேயிலை தூள், சிக்கன், மட்டன், மீன், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வு முடிவுகள் வந்தால் தான் அதில் எதாவது கலப்படம் நடந்ததா என்பது தெரிய வரும். விதிமீறல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். விதிகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் உணவு பாதுகாப்பு விதிமீறல்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இப்போது பெங்களூர் நட்சத்திர ஹோட்டல்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    English Summary

    Food safety officials raided 26 star hotels in Bangalore and found expired milk, meat(பெங்களூர் ஸ்டார் ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை): Bangalore Star Hotels Food Safety Raid latest news in tamil.