பெங்களூர்: கர்நாடகாவில் சுற்றுலா சென்ற 23 வயது இளம்பெண் தங்கும் விடுதியில் சாக்லேட் தின்றுவிட்டு குளிக்கபோனபோது திடீரென்று மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் வர்ஷா. இவருக்கு வயது 23. இவர் தனது நண்பர்களுடன் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவிற்கு கடந்த 11ம் தேதி சுற்றுலா சென்றார்.
இவர்கள் சக்லேஷ்புராவில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அறையில் வர்ஷா தோழிகளுடன் தங்கியிருந்தார். சம்பவத்தின் வர்ஷா தனது அறையில் உள்ள தோழிகளுடன் பேசி கொண்டிருந்தார். பிறகு சாக்லேட் எடுத்து சாப்பிட்டார். அதன்பிறகு அவர் குளிப்பதற்காக புறப்பட்டார். செல்லும் வழியிலேயே வர்ஷா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தட்டி எழுப்ப முயன்றனர். ஆனால் வர்ஷா எழவில்லை. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வர்ஷா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வர்ஷா எப்படி இறந்தார்? என்பது புரியாத புதிராக உள்ளது. இதுதொடர்பாக அவருடன் தங்கிருந்த 2 பேரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் கேட்டபோது, ''வர்ஷா தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டு தான் சுற்றுலா வந்துள்ளார். அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இருப்பினும் இற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வர்ஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதேப் பரிசோதனை அறிக்கையில் தான் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்'' என கூறியுள்ளனர்.