பெங்களூர் 2வது விமான நிலையம் எங்கு வருகிறது? டிகே சிவக்குமார் சொன்ன முக்கிய தகவல்

  • பெங்களூர்: பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைப்பது பற்றி கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தான் 2வது விமான நிலையத்தை பெங்களூரின் தெற்கு பகுதியில் அமைக்க முடிவெடுத்துள்ளதாக டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

    Advertisement

    பெங்களூர் தேவனஹள்ளியில் ஏற்கனவே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. தற்போது 2 விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    கெம்பேகவுடா விமான நிலையத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை கர்நாடகா அரசு கையில் எடுத்துள்ளது. அதோடு ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு போட்டியாகவும் கர்நாடகா அரசின் இந்த செயல் பார்க்கப்படுகிறது.

    பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க மொத்தம் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் விமான நிலையம் அமையும் இடம் பற்றிய முக்கிய விஷயத்தை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரில் நேற்று 2வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்பி பாட்டீலும் பங்கேற்றார். அதன்பிறகு டிகே சிவக்குமார் கூறியதாவது:

    Advertisement

    ''பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் பெங்களூரின் தெற்கு பகுதியில் அமைக்கப்படும். அங்கு நிலத்தின் விலை குறைவாக உள்ளதோடு, அதிகமான மேடு, பள்ளங்கள் இன்றி நிலங்கள் உள்ளன. இருப்பினும் தொழில்நுட்ப ரீதியியாக விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இடம் தேர்வு செய்யப்பட்டு திட்ட வரைவு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது வரை இடம் இறுதி செய்யப்படவில்லை. பெங்களூரின் தெற்கு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது'' என்றார்.

    Advertisement

    பெங்களூரை எடுத்து கொண்டால் 2வது விமான நிலையம் அமைப்பதற்கு மொத்தம் 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் பெங்களூர்தெற்கு பகுதியில் கனகபுரா ரோட்டில் ஹாரோஹள்ளி கிராமத்தின் அருகே தனித்தனியே 2 இடங்களும், பெங்களூர் மேற்கு பகுதியில் நெலமங்களா அருகே குனிகல் ரோட்டில் ஒரு இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 3 இடங்களில் ஏற்கனவே விமான ஆணைய அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    தற்போது டிகே சிவக்குமார் பெங்களூர் தெற்கு பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதன்மூலம் கனகபுரா ரோட்டில் ஹாரோஹள்ளி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 2 இடங்களில் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

    English Summary

    Bengaluru second Airport: Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar held discussions with officials regarding the establishment of a second airport in Bengaluru. Following these consultations, he announced the decision to locate the second airport in the southern part of the city.