பெங்களூரு: பெங்களூரு 5 ஸ்டார் ஓட்டல்கள் என்றாலே எளியோர்கள் எளிதாக உள்ளே சென்று சாப்பிட முடியாது.. அதில் ஒரு பிளேட் சாப்பாடு விலையைக் கேட்டால் தலையே சுற்றிவிடும்.. அப்படிப்பட்ட பிரம்மாண்டமான 5 நட்சத்திர ஹோட்டல்களின் கிச்சன்களில் என்ன நடக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? இந்த செய்தியை பாருங்கள்.. இதை கேட்கவே நெஞ்சம் பதறுகிறது.
சாலையோர தள்ளுவண்டி கடைகளில் ஏதாவது சின்ன தவறு நடந்தால் கூட ஓடோடிச் சென்று சீல் வைக்கும் அதிகாரிகள், இந்த முறை தங்களின் பார்வையை, ஸ்டார் ஓட்டல்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்.
பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தின் அனைத்து பிபிஎம்பி (BBMP) மண்டலங்களிலும் உள்ள 26 3 நட்சத்திர மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களில் 30 சிறப்புப் படைகள் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்து, சோதனை நடத்தின. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் படி இந்த ஆய்வுகள் அமைந்தன. ஸ்டார் ஓட்டலுக்குள் நுழைந்ததுமே, அங்கே கண்ட காட்சியை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர், காரணம், அந்த சமையலறைகளுக்குள் குப்பென்ற வாடை வீசியது.. அழுகிய காய்கறிகள், பூஞ்சை காளான்கள் படர்ந்த உணவுப் பொருட்கள், கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான பால் பொருட்கள் என மொத்தமாக சேர்ந்து துர்நாற்றம் வீசியது.. மொத்தம் 6 முன்னணி 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டும் 250 கிலோவிற்கும் அதிகமான இறைச்சிகள், 207 கிலோ அழுகிய காய்கறிகள், 32 லிட்டர் காலாவதியான பால் மற்றும் 3 கிலோ எக்ஸ்பயரி பேக்கரி உணவுகள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன. இதில், ரேடிசன் புளூ (தி அட்ரியா) ஓட்டலில் இருந்துதான், அதிகபட்சமாக 105 கிலோ கெட்டுப்போன உணவுகள் தூக்கி எறியப்பட்டன. தி லலித் அசோக் ஓட்டலில் 76 கிலோ இறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறி, 32 லிட்டர் காலாவதியான பால் சிக்கியது.. தாஜ் யஷ்வந்த்பூரில் 72 கிலோ இறைச்சியும், போர் சீசன்ஸ் ஓட்டலில் 19 கிலோவும், ஷாங்ரி-லா ஓட்டலில் 15 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன. அதாவது சைவ உணவுகளும் அசைவ உணவுகளும் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் ஒன்றாகவே அடைத்து வைக்கப்பட்டிருந்தனவாம்.. ஆனால், சிக்கிய 5 ஸ்டார் ஓட்டல் நிர்வாகங்கள், தங்களை காப்பாற்றிக் கொள்ள விளக்கங்களை அள்ளி வீசத் தொடங்கியுள்ளன. "எங்கள் ஓட்டலில் சிக்கிய பால், "Best Before" தேதி முடிந்து 1 நாள் ஆனதால் தூக்கி எறிவதற்காக தனியாக வைக்கப்பட்டிருந்தது, இறைச்சி ஃப்ரீசிங் நிலையில்தான் இருந்தது, கெட்டுப்போகவில்லை... சேமிப்பு முறையைத்தான் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்" என்று தி லலித் அசோக் ஓட்டல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும், கிச்சன்களில் இருந்து எடுக்கப்பட்ட காரப் பொடி, மஞ்சள் தூள், முந்திரி, இஞ்சி, மிளகு, சீஸ் மற்றும் அப்பளம் உள்ளிட்ட 35 வகையான உணவு மாதிரிகள் டெஸ்ட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அந்த ரிசல்ட் வெளிவந்ததும், சம்பந்தப்பட்ட ஓட்டல்கள் மீது சட்டப்படி வழக்குகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி 50 மீட்டருக்குள் ஜங்க் ஃபுட்களை விற்கக் கூடாது என்று கர்நாடக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இப்போது நட்சத்திர ஓட்டல்களுக்குள் அதிகாரிகள் நுழைந்துள்ளனர். "பணக்காரர், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது, மக்களின் சுகாதாரத்தில் கை வைத்தால் யாருக்கும் விலக்கில்லை" என்று கர்நாடக சுகாதார அமைச்சர் யு.டி. காதர் பொங்கி எழுந்திருந்த நிலையில், இப்படியொரு அதிரடி பெங்களூரில் நடந்துள்ளது..!!பெங்களூரு ஸ்டார் ஹோட்டல்கள்
6 முன்னணி 5 நட்சத்திர ஓட்டல்கள்
5 ஸ்டார் ஓட்டல் நிர்வாகங்கள்
ஜங்க் ஃபுட்கள்