பெங்களூர்: செப்டம்பர் 1ம் தேதி முதல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கும் பயணிகள் 'பயனர் மேம்பாட்டு கட்டணம்' செலுத்த வேண்டும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கான 'பயனர் மேம்பாட்டு கட்டணம்' குறைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. நம் நாட்டில் உள்ள மிகவும் பிஸியான விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் தான் பெங்களூர் விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டண நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ள இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு பயணிகளிடம் இருந்து பயனர் மேம்பாட்டு கட்டணம் (User Development Fee) வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு விமான நிலையத்தை பொறுத்து மாறும். இது டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்தே வசூலிக்கப்பட்டு விடும். பெங்களூர் விமான நிலையத்தை பொறுத்தவரை அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கு மட்டுமே பயனர் மேம்பாட்டு கட்டணம் உண்டு. பிற இடங்களில் பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் பயணிகளுக்கு பயனர் மேம்பாட்டு கட்டணம் கிடையாது. ஆனால் தற்போது பெங்களூர் விமான நிலையத்தில் புதிதாக பயனர் மேம்பாட்டு கட்டணம் அறிமுகம் செய்யப்படுவதோடு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டணம் குறைக்கவும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறைகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதன்படி, பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான பயனர் மேம்பாட்டு கட்டணம் ரூ.550ல் இருந்து ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான பயனர் மேம்பாட்டு கட்டணம் ரூ.1,500ல் இருந்து ரூ.997 ஆக குறைக்கப்பட்டுள்ளத. அதேவேளையில் வெளிநாடு மற்றும் இந்தியாவின் வெளிநகரங்களில் இருந்து விமானத்தில் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்திற்று வரும் பயணிகளுக்கும் புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ரூ.426 ஆகவும், இந்தியாவின் பிற இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு பயனர் மேம்பாட்டு கட்டணம் ரூ.125 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.