பெங்களூரு: பெங்களூருவில் மனைவி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொன்றுள்ளார் கால் டாக்ஸி டிரைவர் இந்துசேகர்.. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட நிலையில், அவைகளை போலீசார் கண்டெடுத்து வருகிறார்கள். இதுவரை மொத்தம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 பேரின் உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் டாக்ஸி டிரைவர் இந்துசேகரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெவ்வேறு இடங்களில் உடல்களைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், மைசூரு மாவட்டம் சாமுண்டி மலைப்பகுதியில் மேலும் 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். அவர்கள் சுனிதாவின் மூத்த சகோதரர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி திவ்யா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாவரகட்டே பகுதியில் இருந்து சாமுண்டி மலை கோயிலுக்குச் செல்லும் சாலையோர காட்டுப்பகுதியில் இந்த உடல்கள் கிடந்துள்ளன. இந்துசேகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு 2 உடல்களும் சுமார் 500 மீட்டர் இடைவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 24 முதல் 27-ம் தேதிக்குள் அவை அங்கு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 2 உடல்களுமே சிவப்பு நிற பெட்ஷீட்களால் சுற்றப்பட்டிருந்தன. அழுகிய நிலையில் காணப்பட்ட சடலங்களில் கட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. சிவக்குமாரின் உடலில் உள்ளாடை மட்டுமே இருந்ததாம்.. இப்போது பெங்களூரு வடக்கு பிரிவு டிசிபி பாபாசாகேப் நேமகவுட் மேற்பார்வையில் சுமார் 15 போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனர். சிவக்குமார், திவ்யா ஆகியோரின் உடல்களில் நடத்தப்பட்ட முதற்கட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. தலையில் ஏற்பட்ட காயங்களால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு 2 பேருமே உயிரிழந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்ல, கொலை செய்வதற்கு முன்பு இருவருக்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதா அல்லது வேறு வழியில் மயக்கமடையச் செய்யப்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆட்டுக்கல்லால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பான முழுமையான விவரங்கள் தடயவியல் பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும். அதேபோல, இந்த வழக்கில் 11 வயது சிறுவன் ஒருவன் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாருக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டாக மாறியுள்ளது. இந்துசேகரின் மைத்துனர் சங்கர், அவரது மனைவி நளினி ஆகியோரின் மகன்தான் இந்த 11 வயது சிறுவன். போலீசாரிடம் சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், தனது அம்மாவின் அலறல் சத்தத்தைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளான். அதுமட்டுமல்ல, இந்துசேகர் தன்னை தர்மஸ்தலா, சிருங்கேரி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளான். அப்போது வழியில் சில மூட்டைகளை இந்துசேகர் தூக்கி வீசியதைப் பார்த்ததாகவும், அது என்னவென்று கேட்டபோது "குப்பை" என்று இந்துசேகர் சொன்னதாகவும், சிறுவன் தெரிவித்துள்ளான். இந்துசேகருக்கும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர சொத்து பிரச்சினை ஏதாவது இருந்ததா என்றும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. இதனிடையே. மீதமுள்ள 2 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் சிராடி மலைப்பாதை வனப்பகுதியில் போலீசார் தேடுதல் நடத்த உள்ளனர்..!!சிவப்பு நிற பெட்ஷீட்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
11 வயது சிறுவன் வாக்குமூலம்