20 நாட்கள்.. 7 கொலைகள்.. நந்தி ஹில்ஸ்! மனைவியின் மொத்த குடும்பத்தையே தீர்த்த கணவன்!

  • பெங்களூர்: பெங்களூர் மாநகரையே உறைய வைக்கும் வகையில், சினிமா படங்களை மிஞ்சும் ஒரு பயங்கர தொடர் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மனைவியின் குடும்பத்தினர் மீது இருந்த தீராத ஆத்திரத்தால், ஒரு கார் ஓட்டுநர் 20 நாட்களில் தனது மனைவி உள்பட அவரது பிறந்த வீட்டு உறவினர்கள் 7 பேரைத் திட்டமிட்டு ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்றுள்ளார்.

    Advertisement

    கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை காரில் ஏற்றிச் சென்று நந்தி ஹில்ஸ், சார்மாடி காட் கணவாய் மற்றும் தமிழக எல்லைப் பகுதிகள் என பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார்.

    Advertisement

    இதில் 7 வயது அப்பாவி சிறுவனின் சடலம் மட்டும் தற்போது நந்தி ஹில்ஸ் அடிவாரத்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடல்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


    கைதான கொலையாளி யார்?


    பலியானவர்கள் விவரம்

    பெங்களூரு ராஜாஜிநகர், பாஷ்யம் சர்க்கிள் அருகே உள்ள தெருவில் வசித்து வந்த 45 வயதான இந்திரசேகர் என்பவர் கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேரைக் கொன்றதாக இந்திரசேகர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


    பலியான 7 பேரின் விவரங்கள்

    சுனிதா (இந்திரசேகரின் மனைவி)

    Advertisement

    ரூபாவதி (மாமியார்)

    சிவகுமார் (மைத்துனர்)

    சங்கர் (மற்றொரு மைத்துனர்)

    திவ்யா (மைத்துனர் சிவகுமாரின் மனைவி)

    நளினி (மைத்துனர் சங்கரின் மனைவி)

    புனீத் (சிவகுமாரின் 7 வயது மகன்)

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தமாக 7 பேரை ஒருவரே தனி ஆளாக முடித்துக் கட்டியிருப்பது கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


    கொலைக்கான பின்னணி: 20 ஆண்டுகால குடும்பத் தகராறு

    ஸ்ரீராம்புரா பகுதியைச் சேர்ந்த சுனிதாவை, இந்திரசேகர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சுனிதா தனது பிறந்த வீட்டுடன் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்தார். அவரது தாயார் ரூபாவதி மற்றும் சகோதரர்கள் அடிக்கடி இந்திரசேகரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

    Advertisement

    வீட்டு விவகாரங்களில் சுனிதாவின் குடும்பத்தினர் தொடர்ந்து தலையிடுவதும், அவர்களது வருகையும் இந்திரசேகருக்கு ஆரம்பத்திலிருந்தே கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் கணவன் - மனைவி இடையே நாள்தோறும் சண்டை வெடித்தது. சண்டையின் போதெல்லாம் சுனிதாவின் குடும்பத்தினர் சுனிதாவுக்கு ஆதரவாகப் பேசி இந்திரசேகரைக் கண்டித்துள்ளனர்.

    இதனால் குடும்பத்தினர் மீது தனக்குள் கொழுந்துவிட்டு எரிந்த ஆத்திரத்தை அடக்கி வைத்திருந்த இந்திரசேகர், மொத்த குடும்பத்தையுமே தீர்த்துக்கட்ட ஒரு திட்டத்தைத் தீட்டினார்.


    20 நாட்களில் நடந்த கோரத்தாண்டவம்: வரிசையாக அரங்கேறிய கொலைகள்

    இந்திரசேகர் ஒரே நாளில் அனைவரையும் கொல்லாமல், சுமார் 20 நாட்கள் இடைவெளியில் ஒவ்வொருவராகத் தனது வீட்டிற்கு வரவழைத்து, வீட்டில் மசாலா அரைக்கப் பயன்படுத்தும் கனமான ஆட்டுக்கல்லை வைத்து அடித்துக் கொன்றுள்ளார்.

    Advertisement

    மனைவியே முதல் பலி: முதலில் தனது மனைவி சுனிதாவிடம் வாக்குவாதம் செய்து, ஆட்டுக்கல்லால் அவரது தலையில் பலமாக அடித்துக் கொடூரமாகக் கொன்றார். பின்னர் அவரது உடலைத் தனது காரில் ஏற்றிச் சென்று அப்புறப்படுத்தினார். மனைவியைக் காணவில்லை என்று அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கேட்டபோது, அவள் தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளாள் என்று பொய் கூறி ஏமாற்றினார்.

    மது விருந்து வைத்து மைத்துனர்கள் கொலை: மனைவி இல்லாத நிலையில், வீட்டில் பார்ட்டி வைப்பதாகக் கூறி தனது மைத்துனர்களான சிவகுமார் மற்றும் சங்கர் ஆகியோரை ராஜாஜிநகர் வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயக்கமடையச் செய்தார்.

    Advertisement

    போதை தலைக்கேறியதும், இருவரையும் அதே ஆட்டுக்கல்லால் தலையில் அடித்துக் கொன்றார். உடல்களை காரில் ஏற்றி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான சார்மாடி காட் கணவாய்க்கு ஓட்டிச் சென்று, ஆழமான பள்ளத்தாக்கில் வீசி எறிந்தார்.

    சாப்பாடு தருவதாகக் கூறி மருமகள்கள் கொலை: அடுத்ததாக மைத்துனர்களின் மனைவிகளான திவ்யா மற்றும் நளினி ஆகியோரைத் குறிவைத்தார். வீட்டில் பார்ட்டி செய்தோம்.. இப்போது உங்களுக்கும் உணவு சமைத்துள்ளேன், சாப்பிட வாருங்கள் என்று நைசாகப் பேசி தனது வீட்டிற்கு வரவழைத்தார். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும், சற்றும் எதிர்பாராத நேரத்தில் இருவரையும் ஆட்டுக்கல்லால் அடித்துத் சாய்த்தார். பின்னர் இருவரது உடல்களையும் சாக்கு மூட்டைகளில் கட்டி, காரில் ஏற்றிக்கொண்டு நந்தி ஹில்ஸ் மலை அடிவாரப் பகுதிக்குச் சென்று புதர்களுக்குள் வீசினார்.

    மாமியார் மற்றும் 7 வயது சிறுவன் படுகொலை: இறுதியாக மாமியார் ரூபாவதியையும், சிவகுமாரின் 7 வயது மகன் புனீத்தையும் தனது வீட்டிற்கு வரவழைத்தார். உங்க குடும்பமே இங்க இருக்கு வாங்க படம் பார்க்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். எதையும் அறியாத அந்தப் பிஞ்சை.. குழந்தை என்றும் பாராமல் கொன்றுள்ளார்.

    பாட்டியையும் பேரனையும் அதே ஆட்டுக்கல்லால் தலையைச் சிதைத்துக் கொன்றார். அவர்களின் உடல்களையும் காரில் எடுத்துச் சென்று நந்தி ஹில்ஸ் அடிவாரத்தில் வீசிவிட்டு, எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு வந்து வழக்கம்போல் நடமாடத் தொடங்கினார்.


    செல்போன் சிக்னல் காட்டிக்கொடுத்தது: சிக்கியது எப்படி?

    குடும்பத்தினர் அனைவரும் அடுத்தடுத்து மாயமானதால் சந்தேகமடைந்த நளினியின் தாய், பெங்களூர் ஸ்ரீராம்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாயமானவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜாஜிநகர் மற்றும் ஸ்ரீராம்புரா போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    மாயமான நளினியின் செல்போன் எண்ணை போலீசார் தீவிரமாக டிராக் செய்தனர். கொலை செய்யப்பட்ட 7 பேரின் செல்போன்களையும் இந்திரசேகர் தன் வசமே வைத்திருந்தார். அந்த செல்போன் சிக்னல் நேராக ராஜாஜிநகர் பாஷ்யம் சர்க்கிள் அருகே உள்ள இந்திரசேகரின் வீட்டைக் காட்டியது.

    உடனடியாக விரைந்த போலீசார், இந்திரசேகரின் வீட்டை சுற்றிவளைத்து அவரைப் பிடித்தனர். நளினி மற்றும் குடும்பத்தினர் எங்கே என்று கேட்டதற்கு, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறி போலீசாரை திசைதிருப்பப் பார்த்தார். ஆனால் போலீசார் தங்கள் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மொத்த உண்மைகளையும் கக்கி, 7 பேரையும் 20 நாட்களில் அடித்துக் கொன்ற பயங்கரத்தை ஒப்புக்கொண்டார்.


    நந்தி ஹில்ஸில் சிறுவன் உடல் மீட்பு - தொடரும் தேடுதல் வேட்டை

    இந்திரசேகர் அளித்த தகவலின்படி, போலீசார் அவரை நந்தி ஹில்ஸ் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பல மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த 7 வயது சிறுவன் புனீத்தின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    உடல்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய கார் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய ஆட்டுக்கல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மீதமுள்ள சடலங்களை நந்தி ஹில்ஸ், சார்மாடி காட் மலைப் பள்ளத்தாக்கு மற்றும் தமிழக எல்லைக்கு உட்பட்ட காட்டுப் பகுதிகளில் வீசியுள்ளதாக இந்திரசேகர் கூறியுள்ளதால், அந்தந்தப் பகுதி போலீசாருடன் இணைந்து கர்நாடக தனிப்படை போலீசார் ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அடர்ந்த காடுகளில் சடலங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் ஒரு வம்சத்தையே கூண்டோடு அழித்த இந்த வெறிச்செயல் பெங்களூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Bengaluru Horror: Cab Driver Kills Wife and 6 In-Laws with Grinding Stone, Dumps Bodies Across Nandi Hills