பெங்களூர்: பெங்களூர் - ஓசூர் நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் நடக்கும் ரோடு பணி, கட்டுமான பணி, கால்வாய் பணி மற்றும் திடீரென்று பெய்யும் மழை உள்ளிட்டவற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அல்லோலப்பட்டு வருகின்றனர்.
பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் இந்த சாலை இருமாநிலங்களுக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி - காஷ்மீரை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இது உள்ளது. ஆனால் தற்போது அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் மக்கள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அந்த நெடுஞ்சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் தான். பெங்களூர் - ஓசூர் ரோட்டில் பொம்மசந்திரா, சந்தாபுரா மற்றும் அத்திப்பள்ளி இடையே தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சந்தாபுரா - அத்திப்பள்ளி இடையேயான பகுதியில் Peak Hours நேரங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பல்வேறு சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் மெதுவாக நடக்கின்றன. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. சாலை பணி மட்டுமின்றி கட்டுமான பணி, கால்வாய் பணி, திடீரென்று பெய்யும் மழையால் தேங்கும் வெள்ளம் உள்ளிட்டவையும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். குறிப்பாக சந்தாபுரா ஜங்ஷனில் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஓல்டு சந்தாபுரா ரயில்வே மேம்பாலத்தில் தான் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு சாலை அகலப்படுத்துதல் மற்றும் அண்டர்பாஸ் (சுரங்கப்பாதை) அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி கட்டுமானப் பணிகளுக்காகச் சாலையின் ஓரங்கள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலை சுருங்கி சந்தாபுரா - பொம்மசந்திரா - அத்திப்பள்ளி இடையே பயணிப்பவர்கள் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கனமழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமீபத்தில் கூட பெங்களூர் ராஜாஜி நகர் பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமார் சந்தாபுரா அருகே சுமார் 50 நிமிடங்கள் வரை நகரமுடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். இதுபற்றி ஆனேக்கல் எம்எல்ஏ சிவண்ணா கூறுகையில், ''பெங்களூர்- ஓசூர் சாலை என்பது ஜம்மு காஷ்மீர்- கன்னியாகுமரி நெடுஞ்சாலை யின் ஒரு பகுதியாகும். இந்த சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இங்கு நடக்கும் பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும்'' என்றார். இதுபற்றி தினசரி அந்த ரோட்டில் பயணிக்கும் நீல் ராகவேந்திரா என்பவர் கூறுகையில்,''அத்திப்பள்ளி டோல் கேட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் மிகமிக குறைந்த வேகத்தில் செல்ல வேண்டி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பகுதியில் மாலை நேரத்தில் பயணிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டரை மணிநேரம் வரை ஆகிறது. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருந்தும் ஒரு போக்குவரத்து போலீஸ் கூட நிற்கமாட்டார்கள். பெங்களூர் - ஓசூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை பணிகள் நடந்து வருகிறது.போக்குவரத்து நெரிசலை மனதில் வைத்து பணியை விரைந்து முடிக்காமல் மெதுவாக நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் கூட அதிகளவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை டோல் கட்டணம் வசூலிக்கிறது. அதிக டோல் கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சரியான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற என்னம் இல்லை '' என்று விமர்சனம் செய்தார்.