சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?

  • பெங்களூர்: பெங்களூரு நகரின் சாலைகளில் மழை பெய்தால் ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. வாகன ஓட்டிகள் தங்கள் உயிருக்குப் பயந்து பயணம் செய்ய வேண்டிய சூழலே நிலவுகிறது. இந்த அச்சத்தில் இருக்கும் வேளையில், நகரத்தின் புதிய திட்டங்கள் பொதுமக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பல கோடிகளில் திட்டங்கள் தீட்டப்பட்டாலும், தீர்வு மட்டும் எப்போதும் எட்டாக்கனியாகவே தொடர்கிறது.

    Advertisement

    கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அதிரடியான புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தீவிரம் காட்டி வருகிறார். பெங்களூருவில் 17 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் அவரது திட்டம், 18,000 முதல் 40,000 கோடி ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆனால், இந்த பிரம்மாண்ட திட்டம் நகரத்தின் கட்டமைப்பையே சிதைத்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.

    Advertisement

    பெரிய கனவுகள், பெரும் அச்சங்கள்

    சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மாணவர் அமைப்புகளும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சிவகுமார் உறுதியான நிலையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். கட்டுமானப் பணிகளை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவு, எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

    முந்தைய முதல்வர் சித்தராமையா சமூக நலனை மட்டுமே முன்னிறுத்தி, மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய தேவையற்ற பெரிய திட்டங்களை ரத்து செய்தார். ஆனால், சிவகுமார் முற்றிலும் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்; அவரது பார்வை வணிகம் மற்றும் நவீன வளர்ச்சியை நோக்கியே இருக்கிறது.

    Advertisement

    எஸ்.எம். கிருஷ்ணாவின் பாணியில், பெங்களூருவை மாற்ற அவர் விரும்புகிறார். அவர் முன்வைக்கும் திட்டங்கள் காகிதத்தில் பார்க்கும்போது ஈர்க்கும் வகையில் உள்ளன. ஆனால், களத்தில் நிலைமை என்ன? பெங்களூருவின் கடந்தகாலத் திட்டங்களே இதற்குச் சாட்சியாக உள்ளன.

    தோல்வி கண்ட பழைய திட்டங்கள்

    ஹெப்பால் சந்திப்பில் பலமுறை மாற்றங்கள் செய்தும், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மழைக்காலத்தில் மேம்பாலங்களுக்கு அடியில் உள்ள சுரங்கங்கள் மரணப் பள்ளங்களாக மாறுகின்றன. கே.ஆர். சர்க்கிளில் நடந்த சோகத்தை யாரும் மறக்க முடியாது. அந்த சுரங்கப்பாதை இன்றும் மழை நேரத்தில் மூடப்படுகிறது. அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத அரசு, மீண்டும் சுரங்கப்பாதையை நம்புவது வேடிக்கையாகவே உள்ளது.

    Advertisement

    கோரமங்களா, ஈஜிபுரா மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. 2.4 கிமீ நீளமுள்ள இந்தப் பாலம் கட்டுவதற்கே ஒரு தசாப்தம் ஆகிறது. பொதுப்பணித் துறையில் ஊழல் புகாரும் அடிக்கடி எழுகிறது. பணத்தைச் செலுத்தினாலும் வேலைகள் மட்டும் முடிவடைவதில்லை.

    இப்படிப்பட்ட சூழலில், மைசூர் ரோடிலுள்ள, பிடதி பகுதியில் புதிய டவுன்ஷிப் அமைக்க சிவகுமார் திட்டமிட்டுள்ளார். இது விவசாயிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. பெங்களூரு-மைசூர் இடையே புதிய விரைவுச்சாலை திட்டமும் பரிசீலனையில் உள்ளது. ஆனால், ஏற்கனவே தீர்க்கப்படாத சாலைப் பிரச்சினைகள் ஒருபுறம் நீடிக்கின்றன.

    சாலை மேம்பாட்டுக்காக அரசு 2,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆனால், இதேபோல பல கோடி ரூபாய் இதற்கு முன்பும் செலவிடப்பட்டது. சாலைகளில் குழிகள் மட்டும் மாறியபாடில்லை, மக்களின் துயரமும் தீர்ந்தபாடில்லை.

    Advertisement

    சென்னையின் மத்திய பகுதி, சாலைகளில் பயணித்துவிட்டு ஒருவர் பெங்களூர் சாலைகளில் வாகனத்தை ஓட்டினால், நிலவின் பள்ளம் மேட்டில் பயணிக்கிறோமா என்ற நினைப்பு அவருக்கு வருவதை தவிர்க்க முடியாது. தனது லைஃப் ஸ்டைல் மற்றும் கிளைமேட்டால் மேற்கத்திய நாடுகளுடன் போட்டிபோடும் பெங்களூர், சாலை என்று வந்தால் கிராமங்களின் நிலைமையைவிட மோசமாக உள்ளது கொடுமையான முரண்.

    பெங்களூரின் பொறுப்பு அமைச்சராக இருந்தபோது டிகே சிவகுமார் பெங்களூர் கட்டமைப்பை சீரமைக்க பெரிதாக எதையும் செய்யவில்லை. இப்போது மட்டும் என்ன செய்துவிடப்போகிறார் என்ற அதிருப்தி தொடர்கிறது, ராகிகுட்டா-சில்க்போர்டு மேம்பாலத்தை தவிர.

    English Summary

    The article examines Bengaluru's new infrastructure agenda, including a proposed underground tunnel and related costs, and the public opposition it has generated. It contrasts past project outcomes with current plans and highlights governance and funding considerations.