பெங்களூரில் 7 பேர் படுகொலையில் ட்விஸ்ட்.. ஏற்காடு வந்து.. 30 அடி பள்ளத்தில் உடலை வீசிய கொடூரன்!

  • பெங்களூர்: பெங்களூர் மாநகரையே உலுக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரக் கொலை வழக்கில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியின் குடும்பத்தினர் தன்னை அவமதித்ததாகக் கூறி 7 பேரைக் கொன்று உடல்களை வெவ்வேறு மாநிலங்களில் வீசிய கார் டிரைவர் அளித்த தகவலின்படி, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இருந்து அவரது மனைவி மற்றும் மாமியாரின் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    Advertisement

    பின்னணி: அவமதிப்பும் குடும்பத் தகராறும்

    பெங்களூர் ராஜாஜிநகர், பாஷ்யம் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான இந்துசேகர். கால் டாக்ஸி ஓட்டுநரான இவருக்கும், அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

    Advertisement

    சுனிதா தொடர்ந்து தனது தாய்வீட்டுடன் நெருக்கமாக இருந்ததும், மாமியார் வீட்டினர் தன்னைச் சரிவர மதிக்காமல் தொடர்ந்து அவமதித்து வந்ததும் இந்துசேகருக்குத் தாங்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுனிதாவின் மொத்தக் குடும்பத்தையுமே தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

    7 பேர் மாயம் - திடுக்கிட்ட போலீஸ் விசாரணை

    சுனிதா, அவரது தாய் ரூபாவதி, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என அடுத்தடுத்து 7 பேர் மாயமானதால், நளினியின் தாய் பெங்களூர் ஸ்ரீராம்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் இந்துசேகரைப் பிடித்து விசாரித்தனர்.

    Advertisement

    அப்போது, ஆத்திரத்தில் தனது மனைவி சுனிதா உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்றதாக இந்துசேகர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். உடல்களை நந்தி மலை, சிராடி காடு மற்றும் தமிழ்நாட்டின் ஏற்காடு மலைப்பாதை ஆகிய வெவ்வேறு பகுதிகளில் வீசியதாகவும் தெரிவித்தார்.

    ஏற்காட்டில் கர்நாடக - தமிழ்நாடு போலீசார் அதிரடி வேட்டை

    இந்துசேகர் அளித்த தகவலை அடுத்து, கர்நாடக மாநில டி.எஸ்.பி பிரபாவதி தலைமையிலான தனிப்படை போலீசார், குற்றவாளி இந்துசேகரை அழைத்துக்கொண்டு சடலங்களைக் கைப்பற்றத் தமிழ்நாடு விரைந்தனர்.

    ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் போலீசார் உதவியுடன் மலைப்பாதையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஏற்காட்டில் இருந்து நாகலூர் செல்லும் வழியில், கடுக்கமரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் அருகே 30 அடி ஆழப் பள்ளத்தில் சடலங்கள் வீசப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    Advertisement

    30 அடி பள்ளத்தில் 2 மூட்டைகள்

    சடலங்கள் கண்டறியப்பட்ட இடத்திற்கு கர்நாடக டி.எஸ்.பி பிரபாவதி, சேலம் டி.எஸ்.பி கபிலன், ஏற்காடு ஆய்வாளர் அமிர்தலிங்கம் மற்றும் அதிரடிப் படையினர் விரைந்து சென்றனர்.

    அங்கு போர்வையால் சுற்றப்பட்டு, இரண்டு மூட்டைகளாக அழுகிய நிலையில் கிடந்த இந்துசேகரின் மனைவி சுனிதா மற்றும் மாமியார் ரூபாவதி ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சடலங்களை பெங்களூருக்கு கொண்டு சென்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தொடரும் உடல்கள் தேடுதல் பணி

    ஏற்கனவே பெங்களூர் நந்தி ஹில்ஸ் அடிவாரத்தில் 7 வயது சிறுவன் புனீத்தின் உடல் மீட்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்காட்டில் 2 உடல்கள் கிடைத்துள்ளன. மீதமுள்ள 4 பேரின் சடலங்களை சிராடி காடு மற்றும் பிற வனப்பகுதிகளில் தேடும் பணியில் கர்நாடக சிறப்புப் படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    குடும்பப் பகையால் ஒரு குடும்பத்தையே அழித்து, உடல்களைத் தமிழ்நாட்டின் மலைப்பள்ளத்தில் வீசிய இந்தச் சம்பவம் கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Bengaluru Mass Murder: Cab Driver Kills Wife and 6 In-Laws, bodies Recovered from Yercaud Gorge