லாரியில் ஏறி வீட்டுக்கு போகும் பெங்களூர் ஐடி ஊழியர்கள்.. ஆட்டோ - கேப்'பரோதில்லா'.. என்ன நடந்தது?!

  • இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு, புதுமைகளுக்கு பெயர் பெற்ற நகரம். ஆனால் இந்த முறை தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக அல்ல, போக்குவரத்து நெருக்கடிக்காக ஐடி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    பெங்களூர் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருக்கும் நம்ம மெட்ரோ சேவை திடீரென பாதிக்கப்பட்டதால், வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள் லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் ஏறி வீட்டுக்கு செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    Advertisement

    ஒரு தொழில்நுட்ப கோளாறு

    நேற்று மாலை சுமார் 6.32 மணியளவில் கப்பன் பார்க் மெட்ரோ நிலையத்தில் பர்பிள் மெட்ரோ வழித்தடத்தில் இயங்கிய ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 6.30 என்பது அலுவலகம் முடிந்து மக்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் என்பதால் பொதுவாகவே இந்த நேரத்தில் டிராபிக் நெரிசல் உச்சத்தில் இருக்கும். இத்தகைய நேரத்தில் மெட்ரோ சேவை முடங்கியதால் கப்பன் பார்க் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தமாக பாதிக்கப்பட்டது.

    மெஜஸ்டிக் முதல் இந்திராநகர் வரையிலான மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், கப்பன் பார்க், விதான சௌதா, சென்ட்ரல் காலேஜ், மெஜஸ்டிக் மற்றும் ரயில்வே நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.

    Advertisement

    கார் கிடையாது.. ஆட்டோ வராது.. இறுதியில் லாரிதான் வழி!

    மெட்ரோ சேவை முடங்கியதும், டாக்சி கார்கள் டிராபிக் பிரச்சனையால் இப்பகுதிக்கு வர முடியாத நிலை உருவானது. இதனால் ஆன்லைன் ஆப்களில் டாக்சி புக் செய்தாலும் கிடைக்காத நிலை உருவானது. மேலும் கிடைத்த வாகனங்களின் கட்டணமும் பல மடங்கு அதிகமாக இருந்தது என பயணிகள் தெரிவித்தனர்.

    ஆட்டோ ஓட்டுநர்களும் பலர் டிராபிக் காரணமாக பயணிக்க மறுத்துள்ளனர். பொதுவாக பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரிக்கு கூப்பிட்டால் வரமாட்டார்கள், குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதிக்கு கூப்பிட்டால் வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் மெட்ரோ சேவை முடக்கத்தால் எல்லாபக்கமும் அணைகட்டியது போல் மக்களும், வாகனங்களும் சூழ்ந்திருக்கும் வேளையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பரோதில்லா என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

    Advertisement

    இதனால் பல ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், வீட்டுக்கு செல்ல முடியாத நிலை உருவானது. வீட்டுக்கு செல்ல ஒரே வழியாக அப்போது இருந்தது சரக்கு லாரிகள் மற்றும் டிரக்குகள் தான்.

    வைரலான வீடியோக்கள்..

    சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், மெட்ரோ நிலையத்திற்கு வெளியே சென்றுக்கொண்டு இருந்த லாரியில் 20-30க்கும் அதிகமாக மக்கள் நின்று கொண்டு பயணிப்பதும், மற்றொரு வீடியோவில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து லாரியில் ஏறுவதும் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், "ஹைப்பர்லூப் தேவையில்லை... பெங்களூரில் Truck-as-a-Service மாடல் தான் தற்போதையை தேவை என கிண்டல் செய்தனர். "மெட்ரோ டிக்கெட் வாங்கி லாரியில் பயணம் செய்வது பெங்களூரில் மட்டும்தான் சாத்தியம்" என்றும் நகைச்சுவையாக பதிவிட்டனர்.

    Advertisement

    பயணிகள் கூறிய அதிர்ச்சி சம்பவம்

    மெட்ரோவில் பயணித்த ஒருவர் சமூக வலைதளத்தில், "கப்பன் பார்க் சுரங்கப்பாதைக்குள் நுழையும் போது கடைசி பெட்டியில் பெரிய சத்தம் கேட்டது. பின்புற மோட்டார் இயங்கவில்லை. ரயில் வேகம் எடுக்கும்போது குளிர்சாதன வசதியும் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இடையிடையே திடீர் அதிர்வுகளும் ஏற்பட்டன" என்று பதிவிட்டுள்ளார்.

    பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் தொழில்நுட்ப குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சேவையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டன. சில பகுதிகளில் ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டாலும், முழு சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவர தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் இன்று காலை 5 மணி முதல் பர்பிள் மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ சேவை சீராக இருந்தது.

    English Summary

    A technical glitch in Bengaluru’s Purple Metro line stranded thousands of commuters yesterday evening, forcing many IT employees to climb onto lorries and trucks to reach home after autos and cabs refused to ply or demanded exorbitant fares. The incident has sparked viral videos and jokes about Bengaluru’s traffic crisis.