நகை கூட தரேன் எங்களை விட்டுடுங்க.. கணவருக்காக பெங்களூர் - மைசூரு ரோடு அட்டாக்கில் கெஞ்சிய மனைவி

  • பெங்களூர்: பெங்களூர் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரோட்டில் காரில் சென்ற சாகர் குமார் மற்றும் அவரது மனைவியை 9 பேர் கும்பல் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலின்போது தங்க நகை உள்பட எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். எங்களை விட்டு விடுங்கள் என்று தனது மனைவி கெஞ்சியும், தாக்குதல் நடத்திய கும்பல் இரக்கமே இன்றி கொடூரமாக அடித்ததாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்று பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரோடு. இந்த ரோட்டில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் வசித்து வரும் சாகர் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 10 மாத குழந்தையுடன் கடந்த 5ம் தேதி இரவு பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் பயணித்து கொண்டிருந்தார்.

    Advertisement

    மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே இரவு 10.30 மணியளவில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் இறங்கி சாகர் குமாரின் காரை தாக்கியது. காரின் கதவை திறந்து சாகர் குமார், அவரது மனைவி ஆகியோரை கடுமையாக தாக்கிவிட்டு வேகமாக காரில் ஏறி ஓடினர். இதில் சாகர் குமார் படுகாயமடைந்த நிலையில் அவரது மனைவி காயமடைந்தார்.

    சாகர் குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவம் சாகர் குமாரின் காருக்கு பின்னால் நின்ற இன்னொரு காரின் 'டேஷ் கேமரா'வில் வீடியோவாக பதிவானது. இந்த வீடியோ இணையதளங்களில் பரவியது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சாகர் குமார் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதுபற்றி சாகர் குமார் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். இன்னும் 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில் தான் சம்பவ இடத்தில் நடந்தது பற்றி படுகாயமடைந்த சாகர் குமார் விரிவாக விவரித்துள்ளார். என்னுடைய தங்க நகைகளை கூட வைத்து கொள்ளுங்கள். எங்களை விட்டு விடுங்கள் என்று கையெடுத்து மனைவி கெஞ்சியும், இரக்கமே இன்றி அந்த 9 பேர் கும்பல் இருவரையும் தாக்கியதாக கலங்கியபடி கூறியுள்ளார். இதுபற்றி சாகர் குமார் கூறியதாவது:

    ''9 பேர் கும்பல் என்னையும், எனது மனைவியையும் கொடூரமாக தாக்கினர். என்னுடைய 10 மாத குழந்தையையும் விடவில்லை. இந்த தாக்குதலில் பயந்துபோன என் மனைவி அவர்களை கையெடுத்து கும்பிட்டு கணவர், குழந்தை, என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார். தங்கநகை உள்பட தேவையான எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் அவர்கள் மனம் இறங்கி வரவில்லை.
    தொடர்ந்து எங்களை தாக்கினர்.

    Advertisement

    இந்த சம்பவத்துக்கு முன்பு லேசாக கார்கள் மோதி கொண்டன. அதில் என் மீது தவறு இல்லை. எதிர்தரப்பினர் மீது தான் தவறு இருந்தது. ஆனால் அவர்கள் என்னை தாக்கி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக எங்களின் மீதான தாக்குதல் கேமராவில் பதிவாகி வீடியோவாக வெளியாகி உள்ளது. ஆனால் உண்மையில் நெடுஞ்சாலையில் இப்படி எத்தனையோ சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன. அந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? பெங்களூர் - மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் கூட பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இதனால் இதுபோன்று தவறு செய்பவர்கள் தப்பி செல்ல வாய்ப்புள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு இந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன்? தவறு செய்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்'' என உருக்கமாக கூறினார்.

    English Summary

    A video showing a gang of nine people brutally assaulting Sagar Kumar and his wife while they were traveling by car on the Bengaluru-Mysuru Expressway has sparked shock. Sagar Kumar stated that during the attack, even though his wife pleaded with the gang to take whatever they wanted-including their gold jewelry-and begged them to let them go, the attackers beat them brutally without any mercy.