நள்ளிரவில் பெங்களூரை புரட்டிப்போட்ட கனமழை.. செப்டம்பர் 24ம் தேதி வரை ‘எல்லோ அலர்ட்’

  • பெங்களூர்: கடந்த சில வாரங்களால் பெங்களூரில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் தான் பெங்களூரில் நேற்று நள்ளிரவில் திடீரென்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் வரும் 24ம் தேதி வரை கனமழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பெங்களூர் உள்பட கர்நாடகாவில் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவுக்கு வரும். அப்போது பல இடங்களில் மழை பெய்யும். ஆனால் இந்த முறை மழை எதுவும் இல்லை. மாறாக வெயில் அதிகரித்து இருந்தது.

    Advertisement

    கடந்த சில வாரங்களாக பெங்களூர் உள்பட பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தது. 150க்கும் அதிகமான தாலுகாக்கள் வறட்சி பாதித்த தாலுகாக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் நேற்று திடீரென்று பெங்களூரில் மழை வெளுத்து வாங்கியது.

    நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சாந்திநகர், வசந்த் நகர், கோரமங்களா, மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட், மல்லேஷ்வரம், யஷ்வந்தபுரா, விஜயநகர், ஜெயநகர், ஜேபி நகர், ராஜாஜி நகர், நாகரபாவி, சுங்கதகட்டே, காமாட்சிபாளையா, பசவேஸ்வராநகர், ஹெப்பால் உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், சில இடங்களில் விடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    Advertisement

    இதுதொடர்பாக பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ''இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெங்களூரில் அதிகபட்சமாக கெம்பேகவுடா விமான நிலையம் 94.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்ததாக எச்ஏஏல் விமான நிலையத்தில் 66 மில்லி மீட்டர் மழை பாதிவாகி உள்ளது'' என கூறியுள்ளது.

    இந்த கனமழையின் காரணமாக பெங்களூரில் வெப்பம் தணிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெங்களூரில் வெயில் வாட்டி வதைத்தது. தினமும் 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்த நிலையில் நேற்று இரவில் பெய்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    பெங்களூரை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 30 - 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீச வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் குறைநதபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் நிலவ வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களில் வரும் நாட்களில் மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையத்தின் விஞ்ஞானி சிஎஸ் பட்டீல் கூறுகையில், ''கர்நாடகாவில் தெற்கு உள்மாவட்டங்கள், வடக்கு உள்மாவட்டங்கள், கடலோர கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 24ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது. பீதர், கலபுரகி, விஜயாப்புரா, பெலகாவி, தார்வார், ஹாவேரி, கதக், சிவமொக்கா, சிக்கமகளூர், ஹாசன், குடகு, பெங்களூர், கோலார், சிக்கப்பள்ளாப்புரா, பெங்களூர் தெற்கு மாவட்டங்களில் கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    பொதுவாக ஒரு இடத்திற்கு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டால் அங்கு 24 மணிநேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. புரியும் படி கூற வேண்டும் என்றால் 6.5 சென்டிமீட்டர் முதல் 11.5 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும். சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Bengaluru Rain: Bengaluru has been reeling under scorching heat for the past few weeks. Amidst this, the city witnessed sudden, heavy rainfall late last night. The downpour caused floodwaters to surge across roads and led to water stagnation in low-lying areas; a 'Yellow Alert' for heavy rain has now been issued, remaining in effect until the September 24th.