பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

  • இந்தியாவின் சிலிக்கான் வேலியாக விளங்கும் பெங்களூரில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வீட்டு வாடகை மக்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. தற்போது இணையவாசிகள் மத்தியில், முக்கிய டெக் பார்க் பக்கத்தில் இருக்கும் அப்பார்ட்மென்ட் வீட்டின் வாடகை விஷயம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

    Advertisement

    பெங்களூருவில் உள்ள இந்த 3BHK அப்பார்ட்மென்ட் வீட்டின் மாத வாடகை மட்டுமே 1.1 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விளம்பரப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    சமூக வலைதள தளமான எக்ஸ் (X) பக்கத்தில் பயனர் ஒருவர், பெங்களூருவின் வீட்டு வாடகை தளம் ஒன்றில் இடம்பெற்றிருந்த விளம்பரத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்திருந்தார்.

    பெங்களூருவின் மிக முக்கிய ஐடி காரிடாரான எம்பசி கோல்ஃப் லிங்க்ஸ் பிசினஸ் பார்க் அருகே அமைந்துள்ள இந்த 1,800 சதுர அடி 3BHK செமி-பர்னிஷ்டு வீட்டுக்கு மாத வாடகை ரூ.1.1 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தொம்லூர் மற்றும் இந்திரா நகர் போன்ற பிரதான பகுதிகளுக்கு அருகில் உள்ள இந்த ஸ்ரீராம் ஸ்பந்தான என்னும் அப்பார்ட்மென்ட் வீட்டில் மரத் தரைத்தளம், தனிப்பட்ட மொட்டை மாடி, பால்கனி, பூஜை அறை மற்றும் மாடுலர் கிச்சன் உள்ளிட்ட பிரீமியம் வசதிகள் இருப்பதாக விளம்பரம் கூறுகிறது.

    Advertisement

    மாத வாடகை மட்டுமல்ல, இந்த வீட்டுக்கு ரூ.4 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகை (Security Deposit) மற்றும் மாதாந்திர ரூ.6,000 பராமரிப்புக் கட்டணம் (Maintenance Charges) என கூடுதல் செலவுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், டென்னிஸ் மைதானம், பேட்டமிட்டன் ஸ்குவாஷ் கோர்ட், கம்யூனிட்டி உள்ளிட்ட சொகுசு வசதிகள் இருந்தாலும், இந்த விலை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

    இந்த வைரல் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த வாடகையை "அநியாயம்" என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர், இது பல கோடி மக்களின் ஒரு மாத முழு சம்பளம் எனவும், இப்படி இந்த வீட்டில் குடியிருப்பதால் என்ன நன்மை கிடைத்துவிடும், இன்னும் சில மாதம் 10-20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவோருக்கு இந்த வீடு சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்ஃபீல்டு போன்ற ஐடி பூங்காக்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வாடகை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் இந்த ஸ்ரீராம் ஸ்பந்தான அப்பார்ட்மென்ட்-ம் உள்ளது.

    பெங்களூருவில் உயர்தர வீட்டு வாடகை இவ்வளவு உயர்ந்துள்ளது, நடுத்தர வர்க்க ஐடி ஊழியர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. பகிர்ந்து தங்கும் அறைகளின் வாடகை கூட ஒரு சாதாரண ஊழியரின் மாதச் சம்பளத்துக்கு நெருக்கமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், திறமையான இளைஞர்கள் பெங்களூரை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது என்று பலர் கவலை தெரிவிக்கின்றனர்.

    English Summary

    A luxury 3BHK semi-furnished apartment near Embassy Golf Links Business Park in Bengaluru has sparked massive outrage after being listed for ₹1.1 lakh monthly rent plus ₹4 lakh security deposit. This viral listing highlights the severe housing affordability crisis faced by IT employees and middle-class families in the city.