பெங்களூர்: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்' வரும் 23ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தான் 'ஜனநாயகன்' திரைப்படம் பெங்களூரில் பிரபலமான விக்டரி தியேட்டரில் ரிலீஸ் ஆகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ளார். தற்போது தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் விஜய் நடித்த கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக தயாராக இருந்தது. ஆனால் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டப்படி பொங்கல் பண்டிகைக்கு திரைப்படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில் தான் 6 மாதங்கள் கழித்து ஜனநாயகன் திரைப்படத்துக்கு 'ஏ'சென்சார் சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழகம் உள்பட இந்தியாவில் வரும் 23ம் தேதியும், வெளிநாடுகளில் வரும் 24ம் தேதியும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள 'விக்டரி' தியேட்டரில் 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விக்டரி தியேட்டர் என்பது பெங்களூர் காமாட்சிபாளையாவில் அமைந்துள்ளது. இதுபற்றி அந்த தியேட்டர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: '' 'ஜனநாயகன்' திரைப்படம் விக்டரி தியேட்டரில் வெளியாகாது. இந்த திரைப்படத்தை எங்கள் தியேட்டரில் காண ஏராளமானவர்கள் காத்திருப்பது நாங்கள் அறிந்து உள்ளோம். இதனால் அந்த படத்தை தியேட்டரின் திரைக்கு கொண்டு வர நாங்களும் ஆர்வமாக இருந்தோம். பெரிய, சிறியவர் என ஒவ்வொரு விநியோகதஸ்தருக்குமான நிபந்தனைகளின் பேரில் ஜனநாயகன் படத்தை திரையிட தயாராக இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தயாரிப்பாளரான கேவிஎன் புரோடக்ஷன்ஸ் கோரிய நிபந்தனைகள் வழக்கத்தை விட வேறுபட்டிருந்தன. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடும் வரவில்லை. உடன்பாட்டுக்கு வர முடியாததால் கடைசி நேரத்தில் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம். ஜனநாயகன் திரைப்படமும், தளபதி விஜய்யும் பாக்ஸ ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற மனதாரா வாழ்த்துகள். எங்கள் மீதான உங்களின் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு நல்ல படங்களை வழங்குவோம்'' என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கர்நாடகாவில் உள்ள பிற திரையரங்குகளில் இந்த திரைப்படம் வழக்கம்போல் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. வரும் 23ம் தேதி வெளியாகும் 'ஜனநாயகன்' திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், பூஜா ஹேக்டே, மமிதா பைஜு, , பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி . உள்ளது.