சில்லறை இல்லைன்னா டிக்கெட் கிடையாது.. அமைச்சரை கீழே இறக்கிவிட்ட பெங்களூர் பஸ் நடத்துநர்!

  • பெங்களூர்: தமிழ்நாட்டில் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு என்ற பெயரில் 'ரீல்ஸ்' எடுத்து வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது கர்நாடகா காங்கிரஸ் அரசும் இணைந்து விட்டதா? என்ற கேள்வி எழும்பி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் 'மாஸ்க்' அணிந்து பெங்களூர் பிஎம்டிசி பஸ்சில் ஆய்வு மேற்கொண்டதும், சில்லறை இல்லை என்று அவரை பஸ் கண்டக்டர் கீழே இறக்கிவிட்டதும் தான் முக்கிய காரணமாகும். என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. விஜய் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் ரீல்ஸ் மோகத்தில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அவர்கள் ஆய்வு என்ற பெயரில் வெளியிடும் வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

    Advertisement

    சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசு பள்ளி மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதோடு, மாணவி பதில் சொல்லாததை வீடியோவாக வெளியிட்டு விமர்சனங்களை எதிர்கொண்டார். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ சரவணன், ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரியின் டயர்களை திடீர் ஆய்வு செய்தார். டயர் தேய்ந்து இருந்ததை சுட்டிக்காட்டி அவர் செல்போனில் பேசியது கேலிக்குள்ளானது.

    இப்படியாக தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரீல்ஸ் மோகத்தில் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் தமிழகத்தை போல் கர்நாடகா அரசிலும் ரீல்ஸ் மோகம் தொற்றி கொண்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகாவை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறார். இவரது அமைச்சரவையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளரான பைரதி சுரேஷ் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இவர் பெங்களூர் ஹெப்பால் தொகுதியில் வெற்றி பெற்றவர்.

    Advertisement

    இந்நிலையில் தான் பைரதி சுரேஷ் கடந்த 11ம் தேதி இரவு பெங்களூர் நகரில் இயங்கும் பிஎம்டிசி அரசு பஸ்களில் ஆய்வு மேற்கொண்டார். ஹெப்பாலில் இருந்து நாகசெட்டிஹள்ளி நோக்கி பிஎம்டிசி பஸ்சில் அவர் ஏறினார். அமைச்சர் என்பதை மறைக்க அவர் மாஸ்க் அணிந்து சென்றார். கண்டக்டரிடம் ரூ.100 வழங்கி பூபசந்திரா பகுதிக்கு 2 டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர், ''தன்னிடம் சில்லறை இல்லை. இதனால் சரியாக ரூ.12 தந்து டிக்கெட் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் பஸ்சில் இருந்து இறங்கி கொள்ளுங்கள்'' என்று கூறினார். அமைச்சர் பைரதி சுரேசை பஸ்சில் இருந்து இறக்கியும் விட்டார்.

    Advertisement

    இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில் அது இணையதளங்களில் பரவியது. அமைச்சர் பைரதி சுரேசும் பிஎம்டிசி பஸ்சில் ஆய்வு செய்ததாக கூறி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் சில்லறை இல்லை என்று கூறி தன்னை பாதிவழியில் இறக்கிவிட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த பிஎம்டிசி பஸ் கண்டக்டர் ராமகிருஷ்ணா இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிஎம்டிசி பஸ்சில் சில்லறை பிரச்சனைக்கு தீர்வாக யுபிஐ வசதி உள்ளது. ஆனால் கண்டக்டர் ராமகிருஷ்ணா அதுபற்றி எதுவும் கூறாமல் அமைச்சரை பாதிவழியில் இறக்கிவிட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    கடந்த 11ம் தேதி இரவு அமைச்சர் பைரதி சுரேஷ் பெங்களூரில் ஹெப்பால், ஜெயமஹால், டிவி டவர், ஆர்டி நகர், சிபிஐ ரோடு மான்யதா டெக் பார்க், நாகவாரா, எண்ணூர், எண்ணூர் பண்ட, பைரதி பண்டே, கெட்டலஹள்ளி உள்பட பல இடங்களில் பிஎம்டிசி பஸ் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வை பலரும் வரவேற்ற நிலையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் காங்கிரஸ் அரசின் அமைச்சர் பைரதி சுரேசும் ரீல்ஸ்அரசியலை தொடங்கி உள்ளதாக அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    English Summary

    In Tamil Nadu, ministers and MLAs frequently land in controversy by filming and posting 'Reels' under the guise of conducting official inspections. Now, a question has arisen: has the Congress government in Karnataka joined this trend?. After the Karnataka Transport Minister Byrathi Suresh; while inspecting a BMTC bus in Bengaluru wearing a face mask.