கர்நாடகாவுக்கு பெரிய பின்னடைவு.. மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிப்பு!

  • பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு, காவிரி ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இதை கடந்த மாதமே ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    காவிரி ஆற்றின் நீரை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் திட்டம் இருப்பதாகவும், எனவேதான் திட்டம் நிகாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. 'பூவுலகின் நண்பர்கள்' எனும் அமைப்பு தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கு, காவிரி ஆணையம் அளித்துள்ள பதிலில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    காவிரி நீர்

    குடகில் உற்பத்தியாகும் காவிரி, கர்நாடகாவில் பயணித்து.. தமிழகத்தில் பாய்ந்து இறுதியாக வங்கக்கடலில் கலக்கிறது. ஆனால், நதியின் இந்த வழித்தடத்தில் மேகதாது எனும் இடத்தில், பெங்களூர் நகரத்தின் குடிநீர் தேவை மற்றும் மின் உற்பத்திக்காக புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கெனவே தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் கிடைப்பதில்லை. இப்படி இருக்கையில் புதிய அணை கட்டினால், தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீரே கிடைக்காது என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

    திட்டம் நிராகரிப்பு

    சூழல் இப்படி இருக்கையில்தான், அணை குறித்து விரிவான திட்ட அறிக்கையை காவிரி ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. ஆனால், இது குறித்து தங்களால் முடிவெடுக்க முடியாது என்று கூறி, அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது காவிரி நதிநீர் ஆணையம். அறிக்கை முழுயைாக ஆய்வு செய்த மத்திய நீர் ஆணையம், காவிரி நீரை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் திட்ட இருக்கிறது என்றும், சிவனசமுத்திரம் மின் உற்பத்தி திட்டத்தையும், மேகதாது அணை திட்டமும் இணைக்கும் வகையில் அறிக்கை இருப்பதாக கூறி ரத்து செய்திருக்கிறது.

    Advertisement

    என்ன பிரச்சனை?

    மேலும் அணை என்று வரும்போது, அதில் தேக்கப்பட வேண்டிய நீர் குறித்து சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், கர்நாடகாவின் அறிக்கையில் அப்படியான எந்த நிபந்தனைகளையும் பின்பற்றுவதாக தெரியவில்லை என்றும் மத்திய நீர் ஆணையம் கூறியிருப்பதாக, பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கின்றன.

    பழைய கணக்கு

    மேலும், மேதாது அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளவை 59.46 டிஎம்சி- ஆக நிர்ணயிக்க இருப்பதாக தனது திட்ட அறிக்கையில் கர்நாடகா தெரிவித்திருந்தது. 2044ம் ஆண்டு அப்போதைய குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த கொள்ளவை 64 டிஎம்சி-ஆக உயர்திக்கொள்வோம் என்றும் தற்போதைய குடிநீர் விநியோகம் 14.52 டிஎம்சி மட்டும்தான் என்றும் கூறியிருந்தது.

    Advertisement

    மத்திய அரசுக்கே விபூதியா?

    இந்த கணக்கீடுகளில்தான் கர்நாடாக தப்பு செய்திருக்கிறது. அதாவது, 14.52 டிஎம்சி என்பது 1990ம் ஆண்டு நிலவரப்படி பெங்களூரின் குடிநீர் தேவை அளவாகும். 30 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த அதே தேவைதான் இப்போதும் இருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் பெங்களூர் எவ்வளவு பெரியதாக விரிவடைந்திருக்கிறது? அப்படி இருக்கையில் குடிநீர் தேவையின் அளவை ஏன் குறைத்து காட்ட வேண்டும்? என்று மத்திய நீர் ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

    உச்சநீதிமன்றம் சொன்ன அளவு

    உச்சநீதிமன்றம் கூட, பெங்களூரின் குடிநீர் தேவை குறித்து கூறியிருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு வெளியான இறுதி தீர்ப்பில், பெங்களூர் உட்பட.. மொத்த கர்நாடகாவின் குடிநீர் தேவை 33 டிஎம்சி. இதில் பெங்களூருக்கு மட்டும் 24 டிஎம்சி தேவை என்று கூறியிருக்கிறது. ஆனால், மத்திய நீர் ஆணையத்தின் காதில் பூ சுற்றும் கதையாக.. தற்போது மேகதாது அணை கட்டப்பட்டால் பெங்களூருக்கு தற்போதைய குடிநீர் விநியோகம் 14.52 டிஎம்சி ஆக மட்டுமே இருக்கும் என்று கர்நாடகா தனது திட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.

    Advertisement

    இப்படி பழைய கணக்குகளை தூக்கிட்டு வராதீங்க.. என்று சொல்லிதான் மத்திய நீர் ஆணையம், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை நிராகரித்திருக்கிறது. இருப்பினும் கணக்குகளை சரி செய்து மீண்டும் அனுமதி கோருவோம் என்று கர்நாடாக கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Mekedatu Dam Project: The Karnataka government had submitted a Detailed Project Report to the Cauvery Authority for the construction of the Mekedatu dam across the Cauvery River. Reports indicate that the Authority rejected the proposal last month.