3,500 கனஅடியை விடுங்க.. தமிழகத்துக்கு காவிரியில் வரப்போகும் 10,000 கனஅடி நீர்! ஒரே இரவில் மாற்றம்

  • பெங்களூர்: தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தான் 3,500 கனஅடிக்கு பதில் 10,000 கனஅடி தண்ணீரை காவிரியில் திறக்க வேண்டிய நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளது. ஒரே இரவில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நேரடியாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா சார்பில் முறையாக தண்ணீர் திறக்கப்படவில்லை.

    Advertisement

    இதற்கிடையே தான் தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தலா 3,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டது.

    ஆனால் தற்போது வரை கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது என கர்நாடகா கூறி வருகிறது. அதுமட்டுமின்றி விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இருமாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை முதல் காவிரியில் கர்நாடகா சார்பில் 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பலஇடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் அணைக்கு (இங்கிருந்து தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்) வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100 அடியை (கேஆர்எஸ் மொத்த கொள்ளளவு 124 அடி )நெருங்கி வருகிறது.

    அதேபோல், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் இன்னொரு அணையாக கபினி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி என்பது கேரளாவின் வயநாடாகும். வயநாட்டில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கபினிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கபினி அணையும் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது.

    Advertisement

    இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு உள்ளே வினாடிக்கு 15,500 கனஅடி நீர் வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 2,274 அடியை (கடல்மட்டத்தில் இருந்து) தாண்டி உள்ளது. இதனால் கபினி அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கபினியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் அதுகபிலா ஆற்றின் வழியாக டி நரசிப்புரா பகுதியில் உள்ள சங்கமம் வந்து காவிரி வழியாக தமிழகத்துக்கு வரும்.

    அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் கபினயில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி முதல் 10,000 கனஅடி வரை தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இது அணையின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Cauvery Management Authority has ordered the release of 3,500 cubic feet of water per day to Tamil Nadu for a period of 15 days; however, the water has not yet been released. Amidst this situation, Karnataka has been compelled to release 10,000 cubic feet of water into the Cauvery instead of the mandated 3,500 cubic feet.