காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு தான் ஆதரவு! தமிழகத்துக்கு எதிரான பந்த்துக்கு நடிகை ரம்யா சப்போர்ட்

  • பெங்களூர்: தமிழகத்துக்கு எதிராக ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்தப்பட உள்ளது. இந்த பந்த் போராட்டத்துக்கு முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா ஆதரவு தெரிவித்தள்ளார். காவிரி விவகாரத்தில் நடக்கும் போராட்டத்துக்கு எனது ஆதரவு எப்போதும் கர்நாடகாவிற்கு உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்துக்கு கடந்த மாதம் 29ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதனை ஏற்க கர்நாடகா மறுத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கியது.

    Advertisement

    இதனால் அணைகள் நிரம்பிய நிலையில் தமிழகத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி நீர் பிரச்சனை என்பது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

    இருப்பினும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கூறியதை தொடர்ந்து கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் மற்றும் கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் பந்த் போராட்டத்தை அறிவித்தனர். காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க கூடாது என்றும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்தும் இந்த பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    தற்போது மழையால் அணைகள் நிரம்பிய நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்சனை இல்லை. இதனால் போராட்டத்தை பந்த் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கன்னட அமைப்பினரிடம் கேட்டு கொண்டனர்.

    Advertisement

    ஆனால் கன்னட அமைப்பினர் அதனை ஏற்கவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு முட்டுக்கட்டை போடும் தமிழகத்தை எதிர்த்தும், அணை கட்ட இன்னும் அனுமதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 13ல் பந்த் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தான் கன்னட அமைப்பினரின் பந்த் போராட்டத்துக்கு முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இதுபற்றி ரம்யா கூறுகையில், ''நான் மண்டியாவை (காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் கேஆர்எஸ் அணை மண்டியா மாவட்டத்தில் தான் உள்ளது) சேர்ந்தவள். இதனால் காவிரி பிரச்சை என்று வந்தால் விவசாயிகள் பக்கம் தான் நான் நிற்பேன். அதுதான் என்னுடைய வேலை.

    Advertisement

    ஆகஸ்ட் 13ம் தேதி நடக்கும் பந்த் போராட்டத்துக்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் உண்டு. காவிரி விவகாரத்தில் இதற்கு முந்தைய போராட்டங்களில் நான் பங்கெடுத்துள்ளேன். விவசாயிகள் பிரச்சனை என்று வந்தால் அவர்கள் பக்கம் தான் நிற்பேன். இதனை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய தேவையில்லை'' என்றார்.

    நடிகை ரம்யா இதற்கு முன்பு மண்டியா லோக்சபா தொகுதிக்கு 2013ல் நடந்த இடைத்தேர்தலில் வென்று 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் எம்பியாக இருந்தார். 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ரம்யா மண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போதும் அவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Actress Ramya support Karnataka Bandh on August 13: A bandh is set to be observed in Karnataka on August 13 against Tamil Nadu. Former MP and actress Ramya has extended her support to this protest. She stated that she always stands with Karnataka regarding the Cauvery issue.