பெங்களூர்: தமிழகத்துக்கு இன்று முதல் 15 நாட்கள் 3,500 கனஅடி திறக்க காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தன் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என்று பெங்களூர், மைசூரு, மண்டியா உள்பட பல இடங்களில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இன்று முதல் அடுத்த 15 நாட்கள் 3,500 கனஅடி தண்ணீரை தினமும் திறந்து விட வேண்டும் என்று நேற்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்யப்படும் என்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி இன்று பெங்களூரில் கன்ட அமைப்பினர் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். உடலில் சட்டை அணியாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களை கையில் வைத்திருந்தனர். கர்நாடகா அரசு எந்த காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மைசூரில் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாய அமைப்பினரை போலீசார் கைது செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். முன்னதாக நேற்று இரவு மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள குவெம்பு சர்க்கிளில் சமூக ஆர்வலர் நஞ்சுண்டே கவுடா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கோஷமிட்டனர். கர்நாடகா அரசு எந்த காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது. மீறினால் மாநில அளவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று வார்னிங் செய்தனர். அதுமட்டுமின்றி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 31ம் தேதி மண்டியாவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. மண்டியா மாவட்டத்தில் தான் கேஆர்எஸ் அணை உள்ளது. இங்கிருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மண்டியாவை குறிவைத்து பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. இப்படியாக காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் அடுத்தடுத்து போராட்டம் வெடித்து வருவது பதற்றத்தை உருவாக்கி உள்ளது.