பெங்களூர்: தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு, காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா கூறியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எல் - நினோ பாதிப்பால் போதிய மழையின்றி அணையில் தண்ணீர் இல்லை என்று கூறி வரும் நிலையில் கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடகா அந்த உத்தரவை ஏற்கவில்லை.
அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் பந்த் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கர்நாடகா சரியாக தண்ணீர் திறப்பது இல்லை என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு கர்நாடகா அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ''எல் நினோ நிகழ்வு மற்றும் மழை பற்றாக்குறையால் அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனால் தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது'' என்று கூறப்பட்டுள்ளது. இப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்பதில் கர்நாடகா அரசும், கன்னட அமைப்பினரும் உறுதியாக உள்ளனர். அணை நிரம்பினால் மட்டுமே தமிழகத்துக்கு உபரிநீரை திறந்து விட்டு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா செயல்பட்டு வருகிறது. சரி இது இருக்கட்டும். இப்போது கர்நாடகாவில் போதிய தண்ணீர் இல்லை என்று அம்மாநில அரசு கூறி வரும் நிலையில் அங்கே நிலைமை வேறாக உள்ளது. அனைத்து அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் உள்ளது. கர்நாடகா அணைகளில் உள்ள இன்றைய நீர்மட்டம் பற்றி கர்நாடகா மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளதாவது: குடகு மாவட்டத்தில் ஹாரங்கி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 2859 அடியாகும் (கடல்மட்டத்தில் இருந்து). இன்று காலை அணையின் நீர்மட்டம் 2,858.22 அடியாக இருந்தது. அணைக்கு உள்ளே 4,060 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 5,000 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. 8.26 டிஎம்சி (அணையின் மொத்த கொள்ளளவு 8.50 டிஎம்சி) தண்ணீர் உள்ளது. ஹேமாவதி அணையின் மொத்த உயரம் 2,922 அடியாகும் (கடல் மட்டத்தில் இருந்து). இன்று காலை அணையின் நீர்மட்டம் 2,915.70 அடியாக உள்ளது. அணைக்கு உள்ளே வினாடிக்கு 3,216 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் அணையில் 31.28 டிஎம்சி (அணையின் மொத்த கொள்ளளவு 37.10 டிஎம்சி ) தண்ணீர் உள்ளது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து தண்ணீர் கேஆர்எஸ் அணைக்கு வரும். கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். மண்டியா மாவட்டம் கேஆர்எஸ் அணையின் மொத்த உயரம் 124.80 அடியாகும். இந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 109.74 அடியாக இருந்தது. அணைக்கு உள்ளே வினாடிக்கு 4,875 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2,310 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் கேஆர்எஸ் அணையில் 31.25 டிஎம்சி (அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டிஎம்சி) தண்ணீர் உள்ளது. அதேபோல் மைசூர் மாவட்டம் கபினி அணையின் மொத்த உயரம் 84 அடியாகும். அணையில் இன்று காலை 82.36 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணைக்கு 8,448 கனஅடி தண்ணீர் உள்ளே வரும் நிலையில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கபினி அணையில் 18.09 டிஎம்சி (அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி) தண்ணீர் உள்ளது. கேஆர்எஸ் போல் கபினி அணையில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியும். அதாவது தமிழக காவிரி ஆற்றுக்கு மூல ஆதாரமாக உள்ள இந்த 4 அணைகளில் அதிகபட்சமாக மொத்தம் 114.57 டிஎம்சி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது 89.41 டிஎம்சி தண்ணீர் அணைகளில் இருப்பு உள்ளது. இருப்பினும் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா பஞ்சப்பாட்டு பாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.