பெங்களூர்: கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்றைய தினம் 105.04 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 563 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அது போல் இந்த அணையில் இருந்தசு வினாடிக்கு 2,929 கனஅடி நீர் காவிரி ஆற்றில் இருந்து திறந்துவிடப்பட்டிருந்தது.
அது போல் கபினி அணையின் நீர் மட்டமும் நேற்று காலை நிலவரப்படி 2,269 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,039 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நேற்று இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3,429 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று முன் தினம் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,849 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று சற்று அதிகமாகவே திறந்துவிடப்பட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் விட மாட்டோம் என கர்நாடகா அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. எனினும் இயற்கையின் மூலம் தமிழகத்திற்கு நீர் வரத்து கிடைக்கிறது. ஆனாலும் நமது உரிமை நீரை கர்நாடகா அரசு இதுவரை வழங்கவில்லை. எப்போதுமே பஞ்சபாட்டு பாடி கர்நாடகா அரசு, அவர்களது அணை நிரம்பினால் ஆபத்து ஏற்படும் என்ற நிலை வந்தால் மட்டுமே தண்ணீரை திறக்கும். தென்கிழக்கு பருவமழை விலகியநிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.