உதயநிதி VS ராமலிங்க ரெட்டி.. திமுக - காங்கிரஸ் இடையே முற்றும் காவிரி பிரச்சனை.. எக்ஸ் பக்கத்தில் சண்டை

  • பெங்களூர்: காவிரி நீர் விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கும், கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ''கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காது என்று நான் கூறவில்லை'' என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதிலளித்துள்ளார்.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இவர் காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார். இதற்கான பணிகளை விரைவுபடுத்தி உள்ளார். மத்திய அரசிடம் அனுமதி வாங்குவதற்கு தேவையான பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

    Advertisement

    கர்நாடகாவில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ''கர்நாடகாவில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைகளில் இருந்து குடிநீருக்கு தேவையான தண்ணீரே இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கையில் தான் உள்ளது. எங்களால் தன்னிச்சையாக தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடகாவில் இந்த ஆண்டு போதுமான மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் திறக்க முடியாது'' என்று கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதில், ''கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரை திறந்து விட முடியாது' என்றும், 'நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை' என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?. கழகத்தலைவர் எம்கே ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன். காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.

    Advertisement

    இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்று காட்டமாக கூறியிருந்தார்.

    இதற்கு கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர், ''உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காது என்று நான் கூறவில்லை. கர்நாடகாவின் நான்கு அணைகளான கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகியவற்றிற்கு மிகக் குறைந்த அளவே நீர்வரத்து இருப்பதாலும், அவற்றில் போதிய நீர் இருப்பு இல்லாததாலுமே கர்நாடகாவால் நீர் திறக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் (CWRC) பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் (CWMA) மட்டுமே உள்ளது. இதில் கர்நாடக அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.

    2026 ஜூன் 30 அன்று கர்நாடகாவின் நான்கு அணைகளிலும் இருந்த மொத்த நீர் இருப்பு 15.761 டிஎம்சி மட்டுமே. இது அடுத்த மூன்று மாதங்களுக்கு மாநிலத்தின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. 30.06.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டம் வரை, அந்த நான்கு அணைகளுக்கும் வந்த மொத்த நீர்வரத்து 4.05 டி.எம்.சி மட்டுமே (பிலிகுண்டுலுவில் 2.915 டி.எம்.சி).

    Advertisement

    இதனால் பெங்களூரு நகரம், மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராமநகர் மற்றும் பிற நகரங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அந்த நான்கு அணைகளிலும் உள்ள நீரைச் சேமித்து வைக்க வேண்டியது அவசியம் என்று 16.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டங்களிலும், 23.06.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும் கர்நாடகா தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது.

    கூட்டங்களில் கர்நாடகா முன்வைத்த கருத்துகளை காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலனை செய்து பின்வரும் முடிவுகளை அறிவித்தது.

    1. காவிரிப் படுகையில் தற்போது நிலவும் மோசமான சூழல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அணைகளில் உள்ள குறைந்த அளவிலான தண்ணீரை முடிந்தவரை சேமித்து வைக்க வேண்டும்.

    2. இந்த தண்ணீரை வைத்து குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நீர் ஓட்டம் (environmental flows) ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    மே மாதத்தின் பாதியிலிருந்தே, 'எல்-நினோ' (El-Nino) நிகழ்வு தொடங்கியுள்ளதாலும் பருவமழை தாமதமாகவும் பற்றாக்குறையாகவும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு நாளிதழ்கள் வாயிலாக தெரிவித்து வருகிறது.

    வரும் நாட்களில் தென்மேற்குப் பருவமழை வலுவடையும் என்றும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் நீர்த்தேக்கங்களுக்குப் போதுமான நீர்வரத்து இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    A conflict has arisen between the Tamil Nadu Leader of the Opposition and Karnataka's Irrigation Minister Ramalinga Reddy regarding the Cauvery water issue. Karnataka Irrigation Minister Ramalinga Reddy responded to Tamil Nadu Leader of the Opposition Udhayanidhi Stalin, stating, "I did not say that Karnataka would not release water to Tamil Nadu."