ஞானேஷ் குமாருக்கு எதிராக செருப்பு போராட்டம்.. பெங்களூரில் இன்று திரளும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

  • பெங்களூர்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி இன்று பெங்களூரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செருப்பு போராட்டம் நடத்துகிறது. பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் இன்று நடக்கும் போராட்டத்துக்கு பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    Advertisement

    எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் பலவேறு குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வந்தன. எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக சக தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்ததாக வெளியான தகவல் இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மாணவ அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்த ஆரம்பித்த கரப்பான் பூச்சி ஜனதா போராட்ட களத்தில் குதித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராடி வருகிறது.

    கடந்த 2 ஆம் தேதி மும்பையில் போராட்டம் நடத்திய நிலையில், இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் இன்று காலை 10.30 மணிக்கு செருப்பு போராட்டம் நடத்த போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆஷ்தோஷ் ரங்கா அறிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த போராட்டத்துக்கு பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்ஜும் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் தானும் இந்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:- "வாக்காளர் தீவிர திருத்த பட்டியலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக இந்த போராட்டத்தில் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. அதேபோல, யூடியூபரும் அரசியல் ஆய்வாளருமான துருவ் ரத்தே இடது சாரி தலைவர்கள் நேஹா போரா மற்றும் ஆஷ் கோஷ் ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

    English Summary

    'Cockroach Janata Party' is staging a slipper protest in Bangalore today, demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar. Popular actor Prakash Raj has not only extended his support to the protest—scheduled to take place at Freedom Park—but has also announced that he will participate in it.