பெங்களூரில் சூப்பர் பிளான்.. லால்பாக் ஸ்டைலில் மேலும் 3 பூங்காக்கள்.. டிகே சிவகுமார் தகவல்!

  • பெங்களூர்: பெங்களூர் நகரில் லால்பாக் பூங்கா ஸ்டைலில் மேலும் மூன்று பூங்காக்களை அமைக்க கர்நாடக அரசு திட்டம் வைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பெங்களூர் நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு கூடுதல் பொழுதுபோக்கு இடங்களை வழங்கவும், பெங்களூரின் புகழ்பெற்ற லால்பாக் தாவரவியல் பூங்காவைப் போன்ற மூன்று புதிய பூங்காக்களை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார்.

    Advertisement

    சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, "கங்க வம்சத்தின் பெருமை" என்ற தீமில் அமைக்கப்பட்ட 220-வது லால்பாக் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார், பெங்களூரில் உள்ள பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் இது போன்ற ஒரு பூங்காவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

    அந்த நிலம் தொடர்ந்து பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், ஆனால் அங்கு ஒரு பொதுப் பூங்காவை உருவாக்க மாநில அரசு அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "நாங்கள் பாதுகாப்புத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளோம். இத்திட்டம் குறித்து விவாதிக்க நான் விரைவில் பாதுகாப்புத் துறை அமைச்சரைச் சந்திப்பேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    வாரணாசியில் உள்ள பாதுகாப்புத் துறை நிலத்தில் இது போன்ற ஒரு பூங்காவை அமைக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய முதல்வர் டிகே சிவகுமார், பெங்களூரிலும் அதே போன்ற ஒரு முயற்சியை செயல்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "நகருக்குள் உள்ள வனத்துறையின் நிலத்தில் லால்பாக் பாணியில் மற்றொரு பூங்காவை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கிரேட்டர் பெங்களூர் ஆணையம், பெங்களூர் மேம்பாட்டு ஆணையம் மற்றும் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அமைப்புகள் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஈடுபடுத்தப்படும்.

    Advertisement

    பெங்களூரின் பசுமைப் பரப்பைப் பாதுகாப்பதிலும், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. லால்பாக் வெறும் தாவரவியல் பூங்கா மட்டுமல்ல, அது கர்நாடகாவின் வளமான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. விவசாயம், நீர்ப்பாசனம், கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் கங்க வம்சம் ஆற்றிய பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தும் வகையில், அந்த வம்சத்தின் வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த மலர் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கங்க வம்சத்தினர் உருவாக்கிய ஏரிகள் மாநிலத்திற்கு, குறிப்பாக இக்கட்டான காலங்களில் தொடர்ந்து பயனளித்து வருகிறது. அனைத்து வயதினரும் 10 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியைப் பார்வையிட வேண்டும். லால்பாக் ஹைதர் அலியால் நிறுவப்பட்டு, ஆங்கிலேயர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது கர்நாடக அரசால் பாதுகாப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Karnataka Chief Minister DK Shivakumar said that the state government plans to develop three Lalbagh-style parks in Bengaluru, including one on Defence land.