பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை அமைக்க தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் கூறியிருந்தது. இதை வரவேற்ற கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மத்திய அரசு சரியான பதிலையே அளித்திருப்பதாகவும் மேகதாது அணையை எதிர்க்கும் உரிமை மற்ற மாநிலங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எதிர்க்கட்சியினரின் கடும் அமளி காரணமாக கடந்த வாரம் நாடாளுமன்றம் மொத்தமாக முடங்கியது. இந்த வாரம் தான் நாடாளுமன்றம் செயல்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேகதாது தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி, மேகதாது திட்டத்தை செயல்படுத்த காவிரி கீழ்நிலை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் கர்நாடகாவுக்கு இல்லை என்று தெரிவித்தார். அதேநேரம் 2019ம் ஆண்டு கர்நாடகா தாக்கல் செய்த மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்கும்படி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டெல்லியில் கர்நாடக எம்பிக்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் டிகே சிவக்குமார், "கர்நாடக எல்லைக்குள் மேகதாதுவில் அணை கட்ட மற்ற மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இதை எதிர்க்கும் உரிமையும் இல்லை. இதே கருத்தை மாநிலங்களவையிலும் மத்திய அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்காக கர்நாடக மக்களின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்றார். மேலும், தமிழ்நாடு முதல்வர் விஜய் தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் எம்பிக்களிடம் கூறினார். பெங்களூரில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே 67 டிஎம்சி கொள்ளளவில் மேகதாது அணை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை மூலம் பெங்களூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. மேலும், வறட்சி காலங்களிலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட இந்த அணை உதவும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 177 டிஎம்சி தண்ணீரை வழங்க கர்நாடக தயாராக இருப்பதாகவும் டிகே சிவக்குமார் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க.. கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், தமிழ்நாட்டுக்கு தேவைக்கு அதிகமாக காவிரி நீரை கர்நாடக காங்கிரஸ் அரசு திறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். 2025-26 மே மாதத்தில் பிலிகுண்டுலுவில் 2.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், 3.101 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக, அதாவது 0.601 டிஎம்சி கூடுதல் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் கர்நாடகாவின் காவிரி படுகை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அசோக், இதனால் பெங்களூர் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் டேங்கர் லாரிகளை அதிகம் நம்ப வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.அனுமதி தேவையில்லை
டிகே சிவக்குமார்
மேகதாது
கர்நாடகா