வெளியேறிய 70 லிட்டர் ரத்தம்! தமிழ் பெண்ணை நசுக்கி கொன்று.. காவிரியில் நடந்த கொடூர சண்டையில் யானை பலி

  • பெங்களூர்: துபாரே யானைகள் முகாமில் இரு யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் 53 வயதான யானை படுகாயமடைந்lது. அந்த யானைக்கு சிகிச்சை தரப்பட்ட போதிலும் 24 மணி நேரத்திற்குள் அது பரிதாபமாக உயிரிழந்தது. இரவு முழுக்க அந்த யானை வலியால் பிளிறித் துடிதுடித்தது அங்கிருந்த பாகன்கள் மற்றும் அதிகாரிகளை உலுக்கியுள்ளது.

    Advertisement

    கர்நாடகாவின் புகழ்பெற்ற குடகு மாவட்டத்தின் துபாரே யானைகள் முகாமில் (Dubare Elephant Camp) கடந்த திங்கட்கிழமை திடீரென இரு வளர்ப்பு யானைகள் மோதிக் கொண்டன. இது மிக பெரிய ஒரு சோகத்தில் முடிந்தது.. 53 வயதான தந்தமில்லாத மக்னா ரகத்தைச் சேர்ந்த மார்த்தாண்டா என்ற பிரம்மாண்ட யானை மற்றொரு யானையுடன் சண்டையிட்டது.

    Advertisement

    என்ன நடந்தது!

    காவேரி ஆற்றின் கரையோரத்தில் இந்த இரண்டு யானைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட போது அங்கு ஒரு மிகப் பெரிய போர் நடப்பது போல இருந்தது. ஆற்றிற்குள் சண்டை தீவிரமடைந்த போது, மார்த்தாண்டா யானை நிலைதடுமாறி விழுந்தது. அப்போது அங்கு அருகே பெண் சுற்றுலாப் பயணி இருந்த நிலையில், அவர் மீதே அந்த மக்னா யானை விழுந்தது. ஆற்றின் சேறு மற்றும் கலங்கல் நீருக்கு அடியில் அந்தப் பெண் மாட்டிக் கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மார்த்தாண்டா யானைக்கும் இதில் ஆழமான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அந்த இடமே ரத்த வெள்ளத்தில் காட்சியளித்துள்ளது. ஆரம்பத்தில் மார்த்தாண்டாவுக்கு மூன்று காயங்கள் மட்டுமே இருப்பதாக வனத்துறையினர் நினைத்தனர். ஆனால், அதை ஆற்றுக்கு வெளியே இழுத்து, கால்நடை மருத்துவர்கள் தீவிரமாகச் சோதித்த போதுதான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.

    Advertisement

    ஆழமான காயங்கள்

    அதாவது மொத்தம் 7 ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மார்த்தாண்டாவின் காதுகள், ஆணுறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கீழ் வயிற்றிலும் கூட 4 முதல் 5 அடி ஆழத்திற்குத் தந்தக் குத்துக் காயங்கள் இருந்தன. மருத்துவர்கள் தங்களது கையை முழுமையாக உள்ளே நுழைக்கும் அளவிற்கு அந்தக் காயங்கள் ஆழமாக இருந்தன. குறிப்பாக ஒரு ஆழமான காயம் யானையின் குடல் பகுதி, சிறுநீர்ப்பை மற்றும் வயிற்றைக் கிழித்து எறிந்திருந்தது.

    யானைகளின் உடலில் பொதுவாக அவற்றின் ஒட்டுமொத்த எடையில் 10% அளவிற்கு ரத்த அளவு இருக்கும். 4,500 கிலோ எடை கொண்ட மார்த்தாண்டா யானைக்கு 350 லிட்டர் இருந்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் சுமார் 70 முதல் 75 லிட்டர் ரத்தம் வெளியேறியுள்ளது. இதையடுத்து காயமடைந்த யானையைக் காப்பாற்ற மருத்துவர்கள் நள்ளிரவு முழுவதும் போராடினர்.

    Advertisement

    உயிரிழப்பு

    குளுக்கோஸ் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டன. இருப்பினும், 20% ரத்தம் வெளியேறியதால் ஏற்பட்ட ஹைபோவோலமிக் ஷாக் மற்றும் கடுமையான ரத்தக்கசிவு காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மார்த்தாண்டா திடீரெனச் சுருண்டு விழுந்து உயிரிழந்தது. அந்தப் பிரம்மாண்ட இரவு முழுவதும் வலியால் துடித்ததாக அங்கிருந்த பாகன்களே கண்ணீர்விட்டனர்.

    யார் இந்த மார்த்தாண்டா?

    முகாமிற்கு வருவதற்கு முன்பு, மார்த்தாண்டா கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு சிம்மசொப்பனமாக விளங்கியது. கேரளாவின் புகழ்பெற்ற அரிசிப் பிரியன் யானையான அரிகொம்பன் பாணியில், மார்த்தாண்டாவும் சக்லேஷ்பூர் தாலுகாவில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, வீடுகளின் கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

    Advertisement

    முதலில் 2022ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி ஹாசனின் பேளூர் தாலுகாவில் பிடிபட்டு இந்த யானை, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு பந்திப்பூர் காடுகளுக்குள் விடப்பட்டது. ஆனால், சில வாரங்களிலேயே பல நூறு கிலோமீட்டர் நடந்து மீண்டும் ஹாசனுக்கே வந்து தனது நெல் வேட்டையைத் தொடங்கியது. இதையடுத்து 2023 மே 19ம் தேதி சக்லேஷ்பூரின் ஒரு காபி தோட்டத்தில் வைத்து மீண்டும் பிடிக்கப்பட்டு, துபாரே முகாமிற்குக் கொண்டு வரப்பட்டு கும்கி யானையாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒரு காலத்தில் காடுகளில் சுற்றித்திரிந்த ஒரு ராட்சதன், முகாமிற்குள் வந்த பிறகும் இப்படி உயிரிழந்திருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 5 அடி ஆழ தந்தக் குத்துகளுடன் இரவு முழுவதும் வலியால் பிளிறித் துடித்துப் பலியாகியிருப்பது அங்குள்ள பாகன்களுக்கும் கூட சோகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

    English Summary

    Karnataka Dubare Elephant Camp fight 53-year-old tusker-less Makna elephant named Marthanda died(துபாரே முகாமில் யானைகள் மரண மோதல்): Dubare Elephant Camp Tragedy latest news in tamil.