கள்ளநோட்டில் சொகுசு வாழ்க்கை.. பெங்களூரில் ‘பாக்ஸ் கட்டிலை' திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • பெங்களூர்: பெங்களூரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த 41 வயது நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு அவரை 'பாக்ஸ் கட்டில்' உள்ளே அவரது பெற்றோர் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் ஹூலியாரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கடைக்கு கடந்த 2ம் தேதி ஒருவர் சென்றார். அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் வாங்கினார்.

    Advertisement

    அந்த சமயத்தில் அவரது நடத்தையில் கடைக்காரருக்கு சந்தேகம் எழுந்தது. அவர் 500 ரூபாய் நோட்டு உண்மையானதா? கள்ளநோட்டா? என்பதை பரிசோதித்தார்.

    அப்போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுபற்றி உடனடியாக ஹூலியாரு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து சிகரெட் வாங்கியவர் பெங்களூர் சம்பிகே லே-அவுட்டில் வசித்து வரும் ருத்ரேஷ்(வயது 41) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ருத்ரேசை கைது செய்ய போலீசார் பெங்களூர் சம்பிகே லே-அவுட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு ருத்ரேஷின் பெற்றோர் இருந்தனர். அவர்களிடம் ருத்ரேஷ் எங்கே? என்று கேள்வி எழுப்பியதோடு, கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டது பற்றி தெரிவித்தனர். ஆனால் அதனை ருத்ரேஷின் பெற்றோர் ஏற்கவில்லை. தனது மகன் கள்ளநோட்டை புழக்கத்தில் விடவில்லை. அவன் வீட்டில் இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

    Advertisement

    ஆனால் போலீசார் விடவில்லை. வீட்டுக்குள் சென்று அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் ருத்ரேஷ் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் அவரது பெற்றோரிடம் விசாரித்தனர். ருத்ரேசை எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மறுத்த அவரது பெற்றோர் கடைசியாக மகனை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டனர்.

    வீட்டில் உள்ள 'பாக்ஸ் பெட்'டுக்குள் மகனை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக போலீசார்'பாக்ஸ் பெட்'டை திறந்து பார்த்தனர். உள்ளே ருத்ரேஷ் இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூர், பெங்களூர் புறநகர் மற்றும் துமகூரு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

    Advertisement

    அதுமட்டுமின்றி தற்போது கைது செய்யப்பட்ட ருத்ரேஷ், கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதற்கு முன்பு கடந்த 2024ம் ஆண்டு தாவணகெரே போலீசார் அவரை கைது செய்தனர். ரூ20 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதும் , அந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ருத்ரேஷ் மீண்டும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவரது பெயர் ருத்ரேஷ் (வயது 41) என்பது தெரியவந்தது. மேலும் தற்போது அவருடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Police have arrested a 41-year-old man in Bengaluru who was leading a lavish lifestyle by circulating counterfeit currency. When the police arrived at his home to make the arrest, his parents hid him inside a box-type storage bed—an incident that has caused a major sensation.