பெங்களூரு: பெங்களூருவில் நடந்துள்ள சம்பவம்தான் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்ய போய், உச்சக்கட்ட அவமானத்துக்கு ஆளாகியுள்ள ஒரு பெண்.. இது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டு, போலீசாரிடம் புகாரை கொண்டுபோயுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.. அப்படி என்னதான் நடந்தது பெங்களூருவில்?
பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. இவர் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார்.. அந்த பொருளை பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் மல்லிகார்ஜுன் காமத் (22) என்பவர், பெண்ணின் வீட்டிற்கு டெலிவரி செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போதுதான் அந்த வீட்டில், பெண்ணை தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை என்பது அந்த டெலிவரி ஊழியருக்கு தெரியவந்துள்ளது.. பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து,, பார்சல் வழங்க வந்த நபர், உங்கள் பாத்ரூமை நான் பயன்படுத்தி கொள்ளலாமா? என்று அனுமதி கேட்டுள்ளார். அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததுடன், அக்கம்பக்கத்தில் உதவி கேட்டு பாருங்கள் என்று சொல்லி உள்ளார். ஆனாலும் அந்த டெலிவரி ஊழியர், பெண் சொல்வதை காதிலேயே வாங்கி கொள்ளாமல், செருப்பை கழற்றிவிட்டு, வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிறகு வேறுவழியின்றி, பாத்ரூமை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று அந்தப் பெண் அனுமதி அளித்துள்ளார். அந்த நபரும் பாத்ரூம் சென்றுவிட்டு, வெளியே வந்ததுமே அந்தப் பெண்ணிடம் அநாகரிகமான செயலிலும் அருவருக்கத்தக்க செயலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தற்காப்புக்காக உடனே செல்போனில் கேமராவை ஆன் செய்தார். கதவை திறந்து வைத்துக்கொண்டு, உதவிக்கு கூச்சலிட முயன்றார்.. ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட அந்த நபர், அங்கிருந்து எகிறி தப்பி ஓடினார்.. அப்போதும் இளைஞரை அந்த பெண் விடவில்லை, பின்னாடியே அவரை பின்தொடர்ந்து, வீடியோ எடுத்தபடியே ஓடினார்.. இந்த வீடியோ, தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார்.. பிறகு பெங்களூரு போலீசாருக்கான எக்ஸ் தள கணக்குடன் வீடியோவை இணைத்தார்.. "ஆன்லைன் நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களை வேலைக்கு எடுக்கும்போது அவர்களின் பின்னணி என்ன? என்றெல்லாம் முறையாக சோதனை செய்கிறார்களா?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த வீடியோ வைரலாகிவிட்டது.. உடனே மாரத்தஹள்ளி காவல்துறையினர் புகாரைப் பெற்று விசாரணை நடத்தினர். இறுதியில் ஆன்லைன் நிறுவன விற்பனை பிரதிநிதி அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தல், அத்துமீறி நுழைதல் எனப் பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சர்ச்சை அதிகரித்ததை தொடர்ந்து, பிளிப்கார்ட் நிறுவனம் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்தும் டிஸ்மிஸ் செய்தது.. அத்துடன் விளக்கம் ஒன்றையும் தந்துள்ளது. அதில், "இந்தச் சம்பவத்தை ஏற்க முடியாது. பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் பலப்படுத்தப்படும். நாங்கள் காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். வாடிக்கையாளர் பாதுகாப்பு மட்டுமே எங்களுக்கு மிக முக்கியம்" என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. எனினும், டெலிவரி ஊழியர்களின் நடத்தை மற்றும் நிறுவனங்களின் கண்காணிப்பு குறித்த கேள்வியை இந்த பெங்களூர் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.பிளிப்கார்ட் ஊழியர்
பார்சல் டெலிவரி
அதிரடி கைது